(எம்.எப்.எம்.பஸீர்)

முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் காலி , மிலிந்துவ பகுதியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வீட்டினுள்  நுழைந்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் இன்று அச்சத்துடன் கூடிய சூழல் நிலவியது. 

மிலிந்துவ - எச்.சி.எட்மன் மாவத்தை பகுதி வீடொன்ருக்குள்ளேயே இவ்வாறு மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர்.

 குறித்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து வீட்டை தீயிட்டு கொளுத்தப்போவதாக கூறியதாகவும் அதனால் வீட்டார் கூச்சலிடவே அயலவர்களும் ஒன்றுகூட, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 எனினும் மர்ம நபர்கள் உண்மையாகவே அவ்வீட்டுக்குள் வந்த நோக்கம் தீயிட்டு கொளுத்தவா, அல்லது நிலவும் அச்ச சூழலை பயன்படுத்தி திருட்டுக்களை முன்னெடுக்கவா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன.

 எவ்வாறாயினும் சம்பவத்தையடுத்து ஸ்தலத்துக்கு காலி உயர் பொலிஸ் அதிகாரிகள் உடன் விரைந்துள்ளதுடன் விஷேட அதிரடிப் படையினரும் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட ஸ்தல ஆய்வுப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன.

இந் நிலையில் காலி மாவட்டத்தில்  ஆங்காங்கே சமூகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் விதமாகவும் அவற்றை தூண்டும் விதமாகவும் இடம்பெறும் சமப்வங்கள் தொடர்பிலும் அவற்றில் ஈடுபடுவோர் தொடர்பிலும் பொலிசார் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக பிரதேசத்துக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.