தான் பிச்சையெடுக்கும் கோயிலுக்கே சுமார் ஐந்து இலட்ச ரூபாவை நன்கொடையாக அளித்து பலரின் புருவங்களையும் உயர்த்தவைத்திருக்கிறார் மைசூர் யாசகி ஒருவர்!

சீதாலட்சுமி என்ற இந்த 85 வயது மூதாட்டி, மைசூர் வண்டிக்கப்பல் என்ற பகுதியில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில் வாசலில் கடந்த பத்து வருடங்களாக யாசகம் கேட்பவர்.

வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த இவர், வயதானதால் வேலை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் பிறகே கோயில் வாசலில் கையேந்த ஆரம்பித்தார்.

ஆஞ்சநேய ஜெயந்தி நெருங்கி வருவதால், பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கவும் அவர்களுக்கான வசதிகளைச் செய்துகொடுப்பதற்காகவும் பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் சார்பில் நிதி வசூலிக்கப்பட்டது. அப்போது, இந்திய மதிப்பில் இரண்டரை இலட்ச ரூபாயை இந்த மூதாட்டி நன்கொடையாக அளித்துள்ளார்.

இதற்கு முன் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பிரசாதம் தயாரிப்பதற்காக இவர் முப்பதாயிரம் இந்திய ரூபாயை நன்கொடையாக அளித்திருந்தார்.

இவர் பற்றிக் கூறிய கோயில் அதிகாரியொருவர், சீதாலட்சுமி யாரிடமும் எதுவும் கேட்டுத் தொந்தரவு செய்வதில்லை என்றும் பக்தர்கள் எது கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது பணத்தை வங்கியில் வைப்புச் செய்வதைவிட, தனக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் கோவிலுக்குக் கொடுப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாக சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.