வேற்று சாதி இளைஞனைக் காதலித்த சந்தேகத்தின் பேரில், பாகிஸ்தானில் 19 வயது இளம் பெண் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

கிறிஸ்டியன்வாலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சாய்ரா என்ற பெண். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேற்று சாதி இளைஞனுக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக சாய்ராவின் குடும்பத்தினர் சந்தேகித்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த ஞாயிறன்று தூங்கிக்கொண்டிருந்த சாய்ராவை, அவரது தாய் பார்த்துக்கொண்டிருக்க, ஒன்றுவிட்ட சகோதரர் இர்ஃபான் கோடரியால் கொத்திப் படுகாயப்படுத்தினார். 

உயிருக்குப் போராடிய நிலையில் சாய்ரா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாய்ரா உயிரிழந்தார். சாய்ராவின் சடலத்தை அவரது குடும்பத்தினர் அம்பியூலன்ஸில் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

எனினும், இச்சம்பவம் குறித்து சாய்ராவின் குடும்பத்தினர் பொலிஸில் எந்தவித முறைப்பாடும் தெரிவித்திருக்காததால் சந்தேகம் கொண்ட அயலவர்கள் பொலிஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

சாய்ராவின் உடல் அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட அதேவேளை, பொலிஸாரும் அங்கு சென்றனர். பொலிஸாரைக் கண்ட இர்ஃபான் தப்பியோடினார். 

பொலிஸார் சாய்ராவின் தாயைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.