கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்த கணவனை எட்டுத் துண்டுகளாக வெட்டிக் கொன்ற பெண்ணுக்கு முப்பது ஆண்டு கால கடூழிய சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மானிலத்தின் ஜாஜ்ஜர் பகுதியைச் சேர்ந்தவர் பல்ஜீத் (38). இவரது மனைவி பூஜா. பூஜாவுக்கும் மற்றொருவருக்கும் இடையில் காதல் மலர்ந்திருக்கிறது. எனினும், அதற்கு பல்ஜீத் தடையாக இருந்ததால் அவரைக் கொல்லத் திட்டமிட்டார் பூஜா.

அதன்படி, பூஜாவும் அவரது காதலர் உட்பட மேலும் நால்வருமாகச் சேர்ந்து பல்ஜீத்தை வெட்டிக் கொன்றனர். பின்னர், அவரது உடலை எட்டுத் துண்டுகளாக வெட்டி வீட்டின் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்தனர்.

இந்நிலையில், பல்ஜீத்தின் சகோதரர் குல்ஜீத், தனது சகோதரரைக் காணவில்லை என பொலிஸில் புகாரளித்தார். பல்ஜீத் பற்றி விசாரிக்க அவரது வீட்டுக்குச் சென்ற குல்ஜீத்துக்கும் அவரது சகோதரிகளுக்கும் பூஜாவின் முன்னுக்குப் பின் முரணான பதில்கள் சந்தேகத்தை வரவழைத்துள்ளன.

அதேவேளை, பூஜாவின் வீட்டினுள் இருந்து துர்நாற்றம் அடித்ததால், வீட்டினுள் நுழைந்த பல்ஜீத்தின் சகோதர சகோதரியர், அவரது தலையற்ற உடலின் ஒரு பகுதி சூட்கேஸினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலதிக தேடல்களின்போது, பல்ஜீத்தின் தலை அவரது வீட்டின் ஒரு பகுதியில் நிலத்தில் தோண்டிப் புதைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரிலேயே வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இவ்வழக்கில் பூஜா மட்டுமே குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். அவரது காதலர் உட்பட ஏனைய நால்வரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர்.