யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் மருமகனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைமோசக்கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மாமனாருக்கு 7ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும், அவரது மகனுக்கு 2ஆண்டு கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் சரத்பாபு என்பவரை அவரது மனைவியின் தந்தையும் மற்றும் இரண்டு சகோதரர்களும் இணைந்து கொலை செய்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ் வழக்கின் தீர்பானது இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் வழங்கப்பட்டிருந்தது.  இத் தீர்ப்பானது வாசிக்கப்படும் போது நீதிபதி சில விடயங்களை சுட்டிக்காட்டி இக் கொலை குற்றச்சாட்டை கொலை குற்றச்சாட்டில் இருந்து கைமோசக் கொலை குற்றத்திற்கு மாற்றியிருந்தார்.

அதாவது சம்ப தினத்தன்று தனது மகளை மருமகன் அடித்து சித்தரவதை செய்வதாக தொலைபேசி வாயிலாக தகவல்கிடைத்தையடுத்தே தாம் அங்கு சென்று மகளை காப்பாற்ற நடவடிக்கை எடுத்த போது மாமானாருக்கும், மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையிலேயே மருமகன் கத்திக்குத்துக்கு இலக்காயிருந்ததாகவும், குறிக்கப்பட்ட சகோதரன் ஹெல்மட்டால் அடித்ததாகவும் எதிரிகள் தரப்பால் சாட்சியத்தின் போது குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை மன்று கவனத்தில் எடுத்து சாட்சியங்களூடாக பரிசிலித்து இக் கொலை குற்றச்சாட்டை கைமோசக்கொலை குற்றச்சாட்டுக்கு மாற்றியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

இதன்படி கைமோசக் கொலை குற்றச்சாட்டில் குற்றவாளியாக மாமானார் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளமையால் அவருக்கு ஏழாண்டு கடூழிய சிறை தண்டனையும், 10ஆயிரம் ரூபா தண்டப் பணமும் கட்டத்தவறின் மூன்று மாத கடூழிய சிறைத் தண்டனையும், அதே போன்று சகோதரன் ஒருவருக்கு 2 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும் அது ஜந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத்தவறின் மூன்று மாத கடூழிய சிறைத் தண்டனையும் மற்றைய சசோதரனை விடுவித்தும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.