முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் அபிவிருத்திக்காக போராடிப் போராடி எந்த உரிமையினையும் இழக்கவில்லை. ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடி அபிவிருத்தியும் இல்லாமல் உரிமையும் இல்லாமல் இருப்பதை யதார்த்தமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட  தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இந்த நல்லாட்சியில் இந்த நாட்டில் யார் பிழை செய்தாலும் விசாரணை நடாத்தப்படும்  நிலைமை அதிகரித்துள்ளதையே ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பிரதமர் ஆஜராகியுள்ளது வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள், பாடசாலைகளுக்கு பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை முற்பகல் நடைபெற்றது.

மண்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட  தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் பன்முகப்படுத்தப்பட்ட 28 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் 14 அமைப்புகளுக்கான பொருட்கள் மற்றும் நிதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பாடசாலை அதிபர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இன்று இரு பெரும்  கட்சிகள் ஒன்றிணைந்துள்ள வேளையில் தமிழ்பேசும் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இது இருப்பதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

நாங்கள் போராட்டக்களத்தில் இருந்துவந்த சமூகம். காலணித்துவதிற்கு பின்னர் பல்வேறு போராட்டங்களை கண்டவர்கள். இன்று அரசியல்போராட்டத்தின் ஊடாக சென்றுகொண்டுள்ளோம். இழப்புகளை சந்தித்த இனத்திற்கு ஒரு தீர்வினைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதற்காகவே இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிரந்தர அரசியல் தீர்வினை தமிழ் மக்களுக்கு  எழுத்து மூலம் வழங்குவதற்காக அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் முன்னோடியாக இடைக்கால அறிக்கையொன்று வந்துள்ளது. அது தமிழ் மக்களுக்கு முற்றுமுழுதாக சாதகமான அறிக்கையென்று சொல்லமுடியாது. சிலர் சாதகமான விடயம் இருப்பதாக கூறலாம். ஆனால் அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

பல விடயங்கள்  திருத்தப்படவேண்டும். பல விடயங்கள் புகுத்தப்படவேண்டும். எனினும் புதிய அரசியல் அமைப்பு ஊடாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வொன்றினை பெற்றுக்கொள்ளவேண்டும். இன்றைய காலகட்டத்தில் நாட்டில் உள்ளமிக முக்கியமான கட்சிகள் இரண்டு இணைந்துள்ள நிலையில் நாங்கள் இராஜதந்திரமாக செயற்பட்டு தீர்வொன்றை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கின்றோம்.

இந்த நிலையில் இந்த தீர்வினை குழப்பும் வகையில் தீர்வுத்திட்டத்தினை இல்லாமல் செய்யும் வகையில் தென்னிலங்கையில் பல இனவாத அமைப்புகளும் மதவாத அமைப்புகளும் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரும் மிகவும் கடுமையான வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தென்னிலங்கையில் மகிந்த ராஜபக்ஷ சார்ந்த கட்சி வெற்றிபெறுமானால் இன்றுள்ள அரசியல் போக்கு தடைப்படும் நிலையேற்படலாம். தாமதிக்க தாமதிக்க பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படாலாம். அதனால் தான் மிக விரைவில் தீர்வினை பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்தன. பலர் கடத்தப்பட்டனர். ஆனால் இன்று அந்த நிலைமை மாற்றம் பெற்றுள்ளது. எனினும் இந்த நிலைமை இன்று அதிகரிக்கப்படவேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவேண்டும்.

இன்று தீர்வுத்திட்டம் தொடர்பில் அதனை கைவிடுமாறு கோருபவர்கள் மாற்றுத்திட்டம் எதனைக்கொண்டுள்ளார்கள் என்பது கேள்விக்குறியாகும். இன்றுள்ளது போன்றான அரசியல் சூழ்நிலை மீண்டும் ஏற்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

நாங்கள் மீண்டும் ஆயுதம் தூக்கிப்போராடுவதா?புலம்பெயர் நாடுகளில் உள்ள சிலர் மீண்டும் போராட்டத்தினை ஆரம்பிக்குமாறு கோருகின்றனர். அவ்வாறு என்றால் அவர்களின் பிள்ளைகளை இங்கு போராட அனுப்பிவைப்பார்களா என்று அவர்களிடம் கேட்கவிரும்புகின்றேன். நாங்கள் எங்கள் சமூகத்தினை எக்காரணம் கொண்டும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லமுடியாது.

நாங்கள் பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் எமது சமூகத்தினை மேல்நிலைக்கு கொண்டுவரவேண்டும். அதற்காக கூடுதலான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம்.

முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் அபிவிருத்திக்காக போராடி போராடி எந்த உரிமையினையும் இழக்கவில்லை. ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடி அபிவிருத்தியும் இல்லாமல் உரிமையும் இல்லாமல் இருப்பதை யதார்த்தமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.