பத்மாவதி திரைப்படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனே, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரது தலையை வெட்டினால் 10 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என ஹரியானா பா.ஜ.க மூத்த தலைவர் சூரஜ்பால் பகிரங்கமாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேவார் சாம்ராஜ்யத்தின் ராணி பத்மினியின் கதை பத்மாவதி என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இந்த ராணி பத்மினி ராஜபுத்திர மன்னர் ரத்தின சிம்மா அல்லது ரத்தன்சிங்கின் மனைவி.

இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்திருக்கிறார். ஆனால் ராணி பத்மினியை கொச்சைப்படுத்தும் வகையில் டெல்லி மன்னார் அலாவுதீன் கில்ஜியுடன் தொடர்பு இருந்ததாக படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பது ராஜபுத்திரர்களின் குற்றச்சாட்டு. இதை படக்குழு மறுத்துள்ள போதும் ராஜபுத்திரர்கள் பல மாநிலங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதன் உச்சகட்டமாக தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம், தலையை கொண்டு வந்தால் 5 கோடி ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டது.

தற்போது ஹரியானா மாநில பா.ஜ.க மூத்த தலைவர் சூரஜ்பால் தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி தலையை வெட்டி எடுத்தால் ரூ10 கோடி பரிசு தரப்படும் என பகீர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.