நோர்வூட் பகுதியில் காலாவதியான மற்றும் மனித பயன்பாட்டுக்கு உதவாத உணவு வகைகள், திண்பண்டங்கள், பேக்கரி உணவுகள் ஆகியவற்றை  விற்பனைக்காக வைத்திருந்த பல வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்குதல் செய்துள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார அலுவலகத்தின் பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை பருவகால ஆரம்பத்தினை முன்னிட்டு இப்பிரதேசத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இன்று திடீர் சுற்றிவளைப்பு ஒன்று நோர்வூட் நகரில் மேற்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்த சுற்றிவளைப்பின் போது ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்கள் சில்லறை வர்த்தக நிலையங்கள் என்பன சோதனையிடப்பட்டது.

இதன்போது பல கடைகளில் காலாவதி அச்சிடப்படாத மற்றும் பாதுகாப்பான முறையில் பொதியிடப்படாத உணவுப்பண்டங்கள் இதன்போது அகற்றப்பட்டு மண்ணெண்ணெய் இட்டு அழிக்கப்பட்டன. 

இந்த சுற்றிவளைப்பின் போது வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வர்த்தகர்கள் அனைவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்செய்யப்படவுள்ளதாக பொது சுகாதார உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.