புலம்பெயர் தமிழர்கள் மற்றும்  அமெரிக்கா ஆகிய தரப்புக்களின்  சூழ்ச்சியே ஐ.நா.  மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வருவதற்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினரும் இராணுவ வீரர்களை பாதுகாக்கும் இயக்கத்தின் தலைவருமான ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

மேலும் இலங்கையின் இராணுவ வீரர்களை யுத்த குற்றவாளிகளாக சர்வதேசத்திடம் காண்பிக்கவே அவர் இலங்கைக்கு வர காரணம் எனவும் அவர் குறிபபிட்டார்.  

கொழும்பு சம்புத்தாலோக விகாரையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே   அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், 

முப்பது வருட கால யுத்தத்தை நிறைவு செய்து மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ்வதற்காக தனது உயிரையும் தியாகம் செய்யும் இராணுவ வீரர்களுக்கு நாம் பெரும் கடமைப்பட்டவர்கள். ஆகவே நாம் அவர்களை மதிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கென பெரும் தியாகங்களை   செய்யும் அவர்களை சிறைக்கு அனுப்பி தண்டனை வழங்கவே தற்போதய அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இவ்வார இறுதியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரான செயிட்  அல் ஹுசேன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் உறுதியளித்த விடங்களை அரசாங்கம் எந்தளவு தூரம் செயற்படுத்தியுள்ளது என்பதை கண்காணிப்பதற்கு வருகை தருவதாக அரசாங்கம் கூறினாலும் இலங்கையின் இராணுவ வீரர்களை யுத்த குற்றவாளிகளாக சர்வதேசத்திடம் காண்பிக்கவே அவர் இலங்கை வருகின்றார். 

மேலும், நாட்டில் யுத்த குற்றம் இடம்பெற்றது என்பதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை தேடுவதற்கும் அல்லது பொய்யான சாட்சியங்களை திரட்டுவதற்குமே அவர் இலங்கை  வருகின்றார். இதற்கு அமெரிக்காவும், புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களுமே காரணங்களாக அமைந்துள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தில இராணுவ வீரர்களுக்கான மதிப்பு இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஊடகவியளாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கொலை வழக்கிலும் ஆறு இராணுவ புலனாய்வாளர்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு  நாட்டிற்காக உயிர்துறக்கும்  வீரர்களை அவமதிப்பது தவறான விடயமாகும்.

மேலும் இராணுவ வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இதுவரைக்காலமும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல சலுகைகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மேன்மையை உலகுக்கு வெளிக்காட்ட இராணுவ வீரர்களுக்கான உரிய அங்கீகாரம் அவசியமாகும். எனவே இராணுவ வீரர்களை பாதுகாக்கவெனவும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் நாடு பூராகவும் கையெழுத்து வேட்டை மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.