விமானமொன்றும் உலங்குவானூர்தியொன்றும் நடுவானில் மோதி விபத்திற்குள்ளான சம்பவமொன்று லண்டனின் பக்கிங்காம்ஷைர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

லண்டனின் பக்கிங்காம்ஷைர் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் பலர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கையோ, இரண்டிலும் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கையோ உடனடியாகத் தெரியவரவில்லை.

விபத்து இடம்பெற்ற லண்டனிலுள்ள வொட்டெசன் மாளிகை அருகே உள்ள மரங்கள் நிறைந்த வொட்டெசன் மலைப் பகுதிக்கு அவரசரகால பணியார்கள் அழைக்கப்பட்டனர்.

விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவு தமது குழுவினரை விசாரணைக்காக அங்கு அனுப்பியுள்ளது.

ஹை வைகோம்ப் விமானதளத்தில் இருந்து வந்த இரண்டு விமானங்களே மோதிக்கொண்டதாக அத்தளத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பலர் இந்த விபத்தில் இறந்திருக்கலாமெனவும் தற்போது வரை 4 பேர் இறந்திருப்பதாக உறுதியாகத் தெரிவிக்க முடியுமெனவும் அதற்குமேல் இந்தக் கட்டத்தில் கூற முடியாது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வொட்டெசன் மலைப் பகுதியில் இந்த மோதலுக்குப் பிறகு இருந்து புகை கிளம்பியதாகவும், அப்பகுதியை நெருங்குவது கடினம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த இடம் பரபரப்பாக இருப்பதாகவும், சிதைவுகள் விழுந்த இடம் மரங்கள் அடர்ந்த காடாக இருப்பதால் அங்கு செல்வது கடினம் என்றும் விபத்தில் எத்தனை பேர் சிக்கியிருப்பார்கள் என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லையென்றும் சம்பவம் காரணமாக முதலில் மூடப்பட்ட பல வீதிகள் பின்னர் திறக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.