தீபிகா படுகோன் நடித்த பத்மாவதி திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் கோட்டைக்கு வெளியே ராஜ்புத் கர்ணி சேனை அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பத்மாவதி திரைப்படத்தில் சித்தூர் ராணி பத்மினியைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்துச் சித்தோர்கர் கோட்டைக்கு வெளியே ராஜ்புத் கர்ணி சேனை அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எந்தத் திரையரங்கத்திலும் பத்மாவதி படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் முழக்கமிட்டனர். நடிகை தீபிகா படுகோனுக்கும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும் எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டுள்ளனர்.

படத்தைத் திரையிடத் தடை விதிக்குமாறு, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றளித்த ஒரு படத்துக்குத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதையடுத்தே பத்மாவதி திரைப்படத்துக்குத் தடை விதிக்கக்கோரி ராஜஸ்தான், அரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் ராஜ்புத் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பத்மாவதி படம் வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது எனப் படத்தின் நாயகி தீபிகா படுகோன் கூறியிருந்தார். இந்நிலையில் மும்பையில் உள்ள தீபிகா படுகோன் வீட்டுக்குப் பலத்த காவல்துறைப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.