நுவரெலியா ஹாவாஎலிய பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று  நுவரெலியா பொலிஸாரால் இன்று காலை 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலம் பெரியசாமி சியாமளா வயது 41 என்று என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பெண் சமீப காலமாக தனது கணவன் கணேஷனுடன் ஹாவாஎலிய கெமுனு மாவத்தையில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பெண்ணின் கணவன் கணேஷன் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்று தொழில் புரிந்து வந்த நிலையில் வீடு திரும்பிய இவர் தொழிலற்று இருந்து வந்துள்ளார்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக இவர்களுக்கு இடையில் விவாகரத்தும் இடம்பெற்றுள்ளது.

நான்கு வயது மற்றும் ஒன்பது வயது பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்த குறித்த பெண் இன்று காலை ஹாவாஎலிய பகுதியில் சமூர்த்தி வங்கி ஒன்றுக்கு பணம் வைப்பீடு செய்ய சென்று மீண்டும் வீடு திரும்பிய வேளையில் அப்பகுதியில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு அருகாமையில் உள்ள படிகட்டு ஒன்றில் கழுத்து மற்றும் கைகள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க கணவன் நஞ்சு அருந்திய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்திற்கு பின்பே இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் கொலை தொடர்பில் கணவன் கணேசன் என்பவரை சந்தேகிப்பதாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.