இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பார்களென கூட்டமைப்பின் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ மற்றும் தமிழரசுக்கட்சியின் முக்கிய பாராளுமன்ற பிரதிநிதிகளும் கலந்து சுதந்திர தினத்தில் கலந்து கொள்வது குறித்து இதுவரையில் எவ்விதமான உத்தியோகபூர்வமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

முன்னதாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளாததன் காரணத்தால் இச்சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற பிரதிநிதிகளிடையே கருத்துக்கள் மேலெழுந்திருந்தன. அத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில் கூட்டமைப்பின் தலைவர், ஊடகப்பேச்சாளர் ஆகிய இருவரும் சுதந்திரதினத்தில் பங்கேற்பது ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. முன்னதாக கடந்த வருடம் ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடைபெற்றிருந்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

அதேநேரம் நீண்டகலாமாக இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அம்முறைமை தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் ஸ்கொட்லாந்துக்க விஜயம் செய்துள்ளனர்.

அங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி செயலாளரும் கல்முனை மேஜருமான நிஸாம் காரியப்பர் ஆகியோருடன் இணைந்து பல்வேறு உயர்மட்ட முக்கியஸ்தர்களுடன் விரிவான கலந்தாய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இக்குழுவினர் இன்றையதினம் மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளனர். 

இதேவேளை இலங்கையின் 68ஆவது சுதந்திரதினத்தை புறக்கணித்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிக்குமாறு வடக்கு கிழக்கை சேர்ந்த எட்டுமாவட்டகளை பிரதிநிதித்துவம் ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும்’ சங்கங்கள் தீர்மானித்துள்ளன. 

அதேநேரம் இராணுவப்பிரசன்னம், மீள்குடியேற்ற, காணிவிடுவிப்புக்களில் தாமாதம், காணமல்போனோர், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான பராமுகம் உட்பட தமிழ் மக்களின் தயாகப் பிரதேசங்களில் தொடர்ச்சியான அச்சுறுத்தல் நிலைமைகள் காணப்படுவதால் இந்நாளன்று கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு கண்டங்களை தெரிவிக்கவேண்டுமென வவுனியா பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.