பாறையில் மோதி இறந்த நிலையில் ஒன்றரை தொன் நிறையுடைய இராட்சத புள்ளி  திமிங்கிலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்த மூக்கையூர் கடல்பகுதியில்  திமிங்கிலம் ஒன்று காயமடைந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. 

இதைப் அவதானித்த அப்பகுதி மீனவர்கள்,  மன்னார் வளைகுடா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இத்திமிங்கிலத்தின் மேற்பகுதி கறுப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளுடனும் வயிற்றுப்பகுதி காணப்பட்டது.

ஆழ்கடலில் மட்டுமே வசிக்கும் இவ்வகைத் திமிங்கிலம் அவ்வழியே சென்ற கப்பல்களிலோ அல்லது பாறையில் மோதி இறந்திருக்கலாம் எனவும், தட்பவெப்ப சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும்போதும் இதுபோன்ற பெரிய மீன் இனங்கள் திடீர் இறப்பைச் சந்திக்கும் எனவும், இத் திமிங்கிலம் அரிய வகை திமிங்கிலங்களில் ஒன்று எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மன்னார் வளைகுடா வனத்துறை  அதிகாரிகள்  மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதை  தொடர்ந்து பொக்லைன் மூலம் தூக்கி வரப்பட்ட திமிங்கிலம் கடற்பகுதியிலேயே பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்டது. 

இது குறித்து இப்பகுதி மீனவர்கள் கூறுகையில்,  இது போன்ற அரிய வகை திமிங்கிலங்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை அழிவிலிருந்து காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.