ரி.விஷரூஷன்

யாழ். மணியம் தோட்டப் பகுதியில் இளைஞன் ஒருவனை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய தினம் குறித்த வழக்கானது விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது அடையாள அணிவகுப்பு இடம்பெற்றிருந்தது. 

மேலும் சந்தேகநபர்கள் சார்பான முன்னிலையான சட்டத்தரணி இருவருக்கும் பிணை கோரி விண்ணப்பம் செய்திருந்தார்.

எனினும் இவ் வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும், சந்தேகநபர்களிடம் கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.