(க.கமலநாதன்)

சுதந்திர தின நிகழ்வுகளின் போது தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்களம் மொழிகளில் இசைக்கப்படுகின்றமையானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் செயலென தூய்மையான ஹெல உறுமய கட்சியின்  தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

சிங்கள மொழியில் இயற்றப்பட்ட தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படும் போது அர்த்தம் மாற்றம் பெறுவதாகவும் இதன் மூலம் நல்லாட்சி அரசாங்கம் அரசியலமைப்பை மீறிச் செயற்படுகின்றதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடவேண்டுமாயின் முதலில் சர்வஜன  வாக்கெடுப்பை நடத்த வேண்டும். தேசிய கீதம் இயற்றப்பட்ட காலம் தொட்டு தேசிய கீதத்தின் தமிழாக்கமும் உள்ளது.  ஆனால் அது உத்தியோகபூர்வமானது அல்ல.

எமது நாட்டில் தேசிய கீதம் இருமொழிகளில் பாடப்பட்டால் எமது தேசியமும் பிளவு படும் என்பதை மறுப்பதற்கில்லை.  அதேபோல் அரசியலமைப்பை மீறிச் செயற்படும் குற்றத்திற்காக ஜனாதிபதிக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யமுடியும். 

தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.