இந்திய கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் காயமடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

நேற்று காலையில் ராமேஸ்வரம் துறை முகத்திலிருந்து 429 விசைப் படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

இவர்கள் நேற்று மாலை 3 மணியளவில் கச்சைத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.

இதனையடுத்து, கைது நடவடிக்கைக்கு அச்சப்பட்டு ஏராளமான மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை வழி மறித்து இந்திய கடலோரகாவல் படையினர் நிறுத்தியுள்ளனர். ஆனால் படகுகள் நிற்காமல் நாலாபுறமும் ஓடியுள்ளது. 

இதனை தொடர்ந்து, பாக் நீரிணை பகுதியில் மரிய ஜெபமாலை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சில இந்திய மீனவர்கள் மீன்பிடித்து விட்டு பிற்பகலில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் இந்திய கடலோரக் காவல் படையினர் பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியே வந்த ஜெபமாலை படகில் இருந்த மீனவர் பிச்சை மீது இந்தியக் கடலோர காவல் படை வீரர்கள் ரப்பர் மற்றும் டம்மி குண்டு துப்பாக்கியால் படகுகளை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறியதால் மயங்கினார். 

இதனைக் கண்ட சக மீனவர்கள் அதிர்ச்சியடைந்து, இந்திய கடலோரக் காவல் படையினர் தங்களை துப்பாக்கியால் சுட்டு விட்டதாக மீனவ சங்கத் தலைவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனால் மீனவர்கள் இடையே பதற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையே துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்த மீனவரை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது மீனவர்களின் படகு குறுக்கே வந்ததால் இந்தச் சம்பவம் நடந்தாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மீனவர்களிடையே பதற்றம் தணிந்தது. எனினும் இன்று மீனவர்கள் கரை திரும்பிய பின்னரே முழுமையான விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

மேலும் இச்சம்பவத்தை கண்டித்தும் துப்பாக்கி சூடு நடத்திய கடலோர காவல் படை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மீனவ சங்கங்கள்  அவசர ஆலோசணை கூட்டம் நடத்த உள்ளனர்.