உலகக் கிண்ணக் கால்பந்து தகுதிச் சுற்று பிளே ஓவ் ஆட்டத்தில் ஸ்வீடனிடம் இத்தாலி 1–0 என தோல்வியைத் தழுவியதையடுத்து 1958ஆம் ஆண்டுக் குப் பிறகு பிபா உலகக் கிண்ணத் தொடரில் தகுதி பெறாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்வீடன், சோல்னாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்வீடன் பதில் வீரர் ஜேகப் ஜொஹான்சன் கோல் அடித்தார். ஆனால் இத்தாலியினால் ஸ்வீடனின் வலுவான தடுப்பு வியூகத்தை ஒருமுறை கூட ஊடுருவ முடியவில்லை.
இதனையடுத்து சான்சிரோவில் அடுத்த சுற்று பிளே ஓவ் போட்டியில் இதே ஸ்வீடன் அணியை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றால்தான் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும் வாய்ப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆட்டத்தின் 61ஆ-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் தோய்வோனென் த்ரோ இன் பந்து ஒன்றை தனக்குச் சாதகமாக்கி சக வீரர் ஜேகப் ஜோஹான்சனுக்கு அளிக்க, இவர் உதைத்த பந்து கோலுக்குள் சென்றது. இத்தாலி கோல் காப்பாளரால் இந்தப் பந்தை தடுக்க முடியவில்லை.
இதுவே வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது.
அடுத்து இத்தாலியில் நடைபெறவுள்ள போட்டியில் இத்தாலி கடுமையாக ஆடி அதிக கோல் இடைவெளியில் ஸ்வீடனை வீழ்த்த வேண்டியுள்ளது. இல்லையெனில் ஸ்வீடன் 2006ஆ-ம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்ய உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும்.
இதனால் இத்தாலிக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. மிலனில் நடைபெறும் போட்டியில் இத்தாலி ஒருவேளை தோல்வியடைந்தால், சுமார் 60 ஆண்டுகளுக்குப்பின் இத்தாலி உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.