வடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியான பின்னிபிணைந்த உறவு இருந்து வருகின்றது. வடகிழக்கு இணையாவிட்டால் அந்த உறவு இல்லாமல்போகும் நிலையேற்படும். இதனால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே 

இவ்வாறானதோர் நிலைக்கு  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லவே காராணமாக அமைவார் என கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் பிசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா  வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து பதிலளிக்கையில்,

வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று கூறிய அவர், அந்த ஆறு எந்த இடத்தில் இருந்து ஊற்றெடுக்கும், அது எங்கு சென்றடையும், அந்த ஆற்றினால் பயனடைவோர் யார் போன்றவற்றையும்  கூறவேண்டும். இதனை சரியாக கூற அவருக்கு தெரியாது காரணம் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியல்ல அவர் மக்களால் நிராகரிக்கபட்டவர்.

அவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்பட்டவராக இருந்திருந்தால் தற்போதைய அரசியல் நிலையினை கருத்தில் கொண்டு பொறுப்புவாய்ந்த கருத்துக்களை வெளியிட்டிருப்பார். அமைச்சர் அவர்களே நீங்கள் மஹிந்த ஆட்சி காலத்தில் நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் இடங்கள் பலவற்றில் இரத்த ஆறு ஓடியபோது அதற்கு வாய்க்கால் வெட்டிகொடுத்தவரல்லவா? அவ்வாறானோதோர் ஆட்சியாளர் இலங்கைக்கு மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை திரட்டியவர் நீங்களல்லவா.? ஆனால் மக்களோ உங்களை கருத்திலேடுக்காது தற்போதைய ஜனாதிபதிக்கே  வாக்களித்தனர். இதிலிருந்து நீங்கள் பாடம் கற்கவில்லையா? இவ்வாறு சுயநல அரசியல் செய்யும் நீங்கள் தற்போது திடிரென்று இவ்வாறான கருத்தினை வெளியிடுவதன் நோக்கம் என்ன.?  

தமிழ் முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக இருந்து வருகின்ற உறவினை கேள்விக் கூறியாக்குவதாகவே இக்கருத்து அமைந்துள்ளது. உதாரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொருளாதார ரீதியான உறவில் இரண்டு இனமும் பின்னி பிணைந்து  பலதரப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உறவு பலநெடுங்காலமாக இருந்துவருகின்றது. இதன் காரணமாகவே தற்போது பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளீர்கள். இதனைமறைக்க ஆனால்  நீங்கள் எங்களுடன் இணைந்து வாழ விரும்பாவிட்டால் நாங்கள் எவ்வாறு பின்னி பிணைந்து வாழ முடியும்? பிரிவினை எங்கிருந்து வருகின்றது இதனை உருவாக்குவது யார்? இதன் விளைவுகள் என்ன? போன்றவற்றை எதிர்காலத்தில் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலையில் அமைச்சர் இருப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.