மென்பானங்கள் அருந்துவதை விடவும் பியர் அருந்துவது சிறந்தது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார்.

வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி பியர் வரி குறைப்பு தொடர்பில் கேள்வியொன்றை எழுப்பியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மென்பானங்களில் சீனி விலை 20 சதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் பியருக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் பியர் தயாரிப்பின் போது ஒரு நாளைக்கு 300 பொதி சீனி பிரயோகம் செய்யப்படுகின்றது” என்று ஹந்துன்னெத்தி குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர, வெளிநாடுகளில் பொதுவாக அதியுச்ச காரம் கொண்ட மதுபானங்களுக்கு பதிலாக குறைந்த காரம் கொண்ட பியரையே அருந்துகின்றனர். குறிப்பாக பியர் அருந்தும் வீதம் வெளிநாடுகளில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகத்தான் அதிகூடிய காரம் கொண்ட மதுபானங்களை அதிகரித்துள்ளதுடன் பியரின் விலையை குறைத்துள்ளோம். 

எனினும் மென்பானங்களை பொறுத்தவரை மாணவர்கள் அருந்தும் 40 மில்லிலீற்றர் மென்பானத்தில்  100 வீதம் சீனி உட்சேர்க்கப்படுகின்றது. இது பாரதூரமான விடயம். மென்பானங்கள் அருந்துவதனை விடவும் பியர் அருந்துவது சிறந்தது” என்றார்.