ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர், நீதிமன்ற மறியலில் வைத்து விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

2010ஆம் ஆண்டு, சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் கண்காணிப்பாளரை ஹெய்யந்துடுவை பகுதியில் வைத்துத் தாக்கியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று கம்பஹா நீதிமன்றில் வழங்கப்பட்டது. அதில், குறித்த நபருக்கு ஐந்தாண்டு கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்ட சில நிமிடங்களில், மறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றவாளி திடீரென உடல் சுகயீனம் உற்றார்.

உடனடியாக அவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை ஆராய்ந்த மருத்துவர்கள், அவர் விஷம் அருந்தியதாகத் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளி தற்போது அபாய நிலையைத் தாண்டி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.