நாட்டின் பொருளாதாரத்தினை மீளவும் சரியான தடத்தில் முன்னெடுத்துச் செல்வதனை இலக்காகக் கொண்டு ‘நீலப் பசுமை’ எனும் தொனிப்பொருளில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியபோதே நிதி  அமைச்சர் மங்கள சமரவீர மேற்படி வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்தார்.

பாரளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளமையால் நேற்று காலை முதலே பரபரப்பான நிலையில் பாராளுமன்றம் காணப்பட்டது. குறிப்பாக விசேட அதிரப்படையினர், பொலிஸார் ஆகியோர் கடைமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததோடு விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றிருந்தது.

நண்பகலுக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை அதிகரித்திருந்ததோட அழைக்கப்பட்ட விசேட விருந்தினர்களும் வருகைதர ஆரம்பித்தனர். நேரம் நெருங்க நெருங்க உறுப்பினர்கள் அனைவரும் சபைக்குள் பிரவேசிக்க ஆரம்பித்தனர். ஆளும் கட்சி, உறுப்பினர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் என்ற பேதமின்ற ஆங்காங்கே கூடிக்கூடி உரையாடியவாறு இருந்தனர்.

இவ்வாறான நிலையில் சரியாக பிற்பகல் 3மணிக்கு சபை அமர்வு ஆரம்பமானது. அக்கிரஆசனத்திற்கு வருகை தந்த சபாநாயகர் கருஜெயசூரிய சபாநாயகர் பாராளுமன்ற உறுப்புரிமை இழந்த கீதாகுமரசிங்வின் வெற்றிடம் இருப்பது குறித்த அறிவிப்பினை விடுத்தார். 

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் தினேஷ் குணவர்த்தன எம்.பி ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பினார். இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆளும் தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் பரஸ்பரம் கூச்சல்களை எழுப்பியவாறிருந்த நிலையில் தினேஷ் குணவர்த்தனவின் ஒழுங்குப்பிரச்சனை எழுப்புவதற்குரிய இடமளிக்கப்பட்டால் அமைதியான நிலைமை நீடித்தது. 

நிதி அமைச்சர் மங்கள சமரவீர பிற்பகல் 3.07இற்கு சபைக்கு வருகை தந்தார். இவர் வருகை தரும்போது ஆளும் தரப்;பினர் மேசைகளில் தைட்டி வரவேற்றனர். புன்னகையுடன் சபைக்குள் பிரவேசித்த நிதி அமைச்சர் கூட்டு எதிர்க்கட்சியின் ஆரம்ப நிரலில் அமர்ந்திருந்த முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பியைப் பார்த்து கைகாட்டவும் அவரும் பதிலுக்கு புன்னகையுடன் மேசையில் தட்டி வரவேற்றார். தனது கையில் இருந்த கறுப்பு நிற கோப்பினை தூக்கிக் காட்டியவாறு  தனது ஆசனத்திற்குச் சென்று உரையை ஆரம்பித்தார். கடந்த வரலாற்றை நினைவுப்படுத்தி தனது உரையை ஆரம்பித்த மங்கள சமரவீர அதில் அதிக நேரம் செலுத்தாது நாட்டின் எதிர்காலம் தொடர்பிலேயே அதிகளவு கவனம் செலுத்தினார்.

முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க வரவு செலவுத்திட்ட விவாதம் ஆரம்பித்திருந்த நிலையில் 3.25க்கே சபைக்குள் பிரவேசித்து பின்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

இதேநேரம் கூட்டு எதிர்க்கட்சியில் முக்கியஸ்தரான விமல் வீரவன்ச எம்.பி, முன்னாள் நீதி அமைச்சர்  விஜேதாஸ ராஜபக்ஷ சபைக்கு வரவில்லை. நாடாளுமன்றம் மீது குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டுமெனக் கூறிய விலம் வீரவங்ச, முன்னாள் சபாநாயர் சமால் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எவரையும் சபையில் காணவில்லை. 

வரவு செலவுத்திட்ட உரையை நீதி அமைச்சர் தொடர்ந்து கொண்டிருந்த போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இடையிலேயே 3.40க்கு வெளியேறிச்சென்றார். அவரைத்தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வெளியேறிச் சென்றபோதும் பின்னர் மீண்டும் சபைக்கு வருகைதந்து சபை நிறைவடையும் வரையில் அமர்ந்திருந்தார்.

நீதி அமைச்சரின் உரை நீண்டுகொண்டு சென்றுகொண்டிருந்தபோது ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் அமைச்சா நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, சபை முதல்வரும் அமைச்சருமான   லக்ஷ்மன் கிரியெல்ல, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் சரத் அமுனுகம போன்றவர்கள் தூங்கி வழிந்தவண்ணமிருந்தனர்.

அதேநேரம் கூட்டு எதிர்க்கட்சியின் எம்.பிக்களா தினேஷ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்புக்களை எடுத்தவாறும் நீதி அமைச்சரின் உரையை இடையிடையே குழப்பியவாறும் இருந்தனர். 

2018ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், மாகாண முதலமைச்சர்கள், ஆளுனர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், முப்படைதளபதிகள், திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

குறிப்பாக ஐ.நா. வதிவிட பிரதிநிதி உனா மெக்கோலி, இந்தியத்தூவர் தரன்ஜித்சிங் உள்ளிட்ட அனைவரும் நீதி அமைச்சர்மங்களவின் உரையை கேட்டு குறிப்பெடுத்தவாறு இருந்தனர்.

நீதி அமைச்சர் மங்கள சமரவீர தனித்தனியாக ஒவ்வொரு தாளாக பார்தவாறு தனது உரையை நீட்டிச் சென்றவர் மலை 5.42இற்கு உரையை நிறைவு செய்தார். அதன் பின்னர் சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தேநீர் விருந்துக்கான அழைப்பினை விடுத்து சபை ஒத்திவைக்கும் யோசனையை முன்வைத்தார்.