ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் நிகழ்ச்சியில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.

இவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார். முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும். 

இதே போட்டியில் இவரது கல்லூரியைச் சேர்ந்த பிரேமகுமார் மிதுஷான் 43.43 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

புதனன்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் (13.41 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேவேளை கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டிகளில் நேற்று பிற்பகல் 3.00 மணிவரை 14 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

முதலாம் நாளன்று 3 புதிய சாதனைகளும் நேற்றைய தினம் 11 சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன. நாளை போட்டியின் கடைசி நாளாகும்.