அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

மக்களின் வாழ்க்கை நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டு மக்களின் வாழ்க்கையை நல்ல நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான வசதிகளை வழங்க தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கொலன்னாவை சாலமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ''லக்சந்த செவன'' வீட்டுத் திட்டத்தின் 3 ஆவது கட்டத்தை நேற்று பிற்பகல் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் வழங்கும் இந்த நிவாரண உதவியை காலதாமதமின்றி மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வர்த்தக சமூகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, விலை குறைக்கப்பட்ட உணவுப்பொருட்களை அதே விலைக்கு நுகர்வோருக்கு கிடைக்கச் செய்வது வர்த்தகர்களது கடமையாகும் என்பதுடன், அவ்வாறு இல்லாதபோது அது தொடர்பாக கண்டறிவதற்கு அரசாங்கம் நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

வரட்சியின் காரணமாக தேசிய உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையினால் அரிசி மற்றும் தேங்காயின் விலைகள் அதிகரித்துள்ளதுடன், அரிசியை வெளிநாட்டில் இருந்தேனும் கொண்டுவந்து நிவாரண விலையில் மக்களுக்கு வழங்க முடியுமாக இருந்தபோதும் தேங்காயை அவ்வாறு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சிறந்த வெளிநாட்டுக் கொள்கை காரணமாக இன்று சர்வதேச ரீதியாக இலங்கைக்குக் கிடைக்கும் பொருளாதார உதவிகள் அதிகரித்துள்ளன என்றும் கடன் சுமையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட கொள்கைசார்ந்த தீர்மானங்கள் மூலம் பல்வேறு வெற்றிகள் கிடைத்துள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நகரங்களை அமைக்க முடியும் என்றபோதும் உயிர்வாழும் நகரங்களை அமைப்பது கடினம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கொங்ரீட் கட்டிடங்களுக்குள் வாழும் மக்களின் வாழ்க்கையை அழகுபடுத்துவதற்கு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மேல் மாகாண அபிவிருத்திக்கு பாரிய தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் சமமான அபிவிருத்தியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பெருநகர மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபை நகர புனர்வாழ்வு திட்டத்தின் கீழ் கொழும்பு நகரில் குறைந்த வசதிகளைக் கொண்ட நகரப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள “லக்சந்த செவன” வீட்டுத்திட்டத்தின் 3 ஆவது கட்டம் 396 வீடுகளைக் கொண்டுள்ளது. 

மீத்தொட்டமுல்ல குப்பைமேடு சரிந்ததில் வீடுகளை இழந்த 87 குடும்பங்களுக்கும் பேர வாவியை அண்மித்த 87 தோட்டம், 175 தோட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்காக இவ்வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய வீடுகள் களனிவெளி புகையிரதப் பாதைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காரணத்தினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இரண்டு படுக்கையறைகளுடன் அனைத்து வசதிகளையும் கொண்ட வீட்டு அலகொன்றின் நிர்மாணப்பணிகளுக்கு நான்கு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 12 மாடிகளைக் கொண்ட வீட்டுக் கட்டிடத்தொகுதிக்கு செலவிடப்பட்டுள்ள மொத்தச் செலவு 15,840 இலட்சம் ரூபாவாகும்.

நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்து வீட்டுத் திட்டத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி, வீட்டுத்திட்டத்தைப் பார்வையிட்டார். 11 வீட்டு உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி வீட்டுத் திறப்புகளை வழங்கிவைத்தார்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.