இமாச்சலப் பிரதேசத்தில் நாளை (10) நடைபெறவுள்ள தேர்தலில், ஒரு சாதாரண குடிமகனுக்கு செங்கம்பள வரவேற்பை ஏற்பாடு செய்திருக்கிறது இந்திய அரசு. காரணம், இந்தியாவின் முதலாவது வாக்காளர் இவர் என்பதே!

ஷியாம் ஷரண் நேகி (101) என்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். 1947இல் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் முதலாவது தேர்தல் 1952ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.

எனினும், அந்தத் தேர்தலின் முதற்கட்டமாக பனிப்பிரதேசமான இமாச்சலில் 1951ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதியே தேர்தல் நடத்தப்பட்டது. இதில், முதலாவது வாக்காளராகத் தமது வாக்கைப் பதிவு செய்தவர் ஷியாம் ஷரண் நேகி.

அன்று முதல் இன்று வரை இந்தியாவில் நடைபெற்றுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் பதினாறிலும், சட்டமன்றத் தேர்தல்கள் பதினான்கிலும் தவறாமல் வாக்களித்துள்ளார் நேகி. நாளை அவர் வாக்களிக்கப் போகும் 31வது தேர்தலாகும்.

இந்தியத் தேர்தல் ஆணையம் நேகியை விளம்பரத் தூதுவராக நியமித்திருப்பதுடன், அவர் வாக்களிக்க வசதியாக வாகன ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருக்கிறது.