பிணைமுறி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பது நல்லாட்சி வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவே. பிணைமுறி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது தொடர்பாக அரசாங்கத்தின் சில பிரிவினர் தமக்கு குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன் வைக்கின்றபோதும் தான் அதனை மேற்கொண்டது, நல்லாட்சி அரசாங்கம் என்ற வகையில் சமூக நீதியை நிறைவேற்றி ஊழல் மோசடியை ஒழித்துக் கட்டுவதற்காக மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கேயாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இன்று (08) முற்பகல் பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் இடம்பெற்ற சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் இரண்டாவது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பாக தவறிழைத்த அனைவரும் வகைகூற வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஏற்கனவே இருந்த ஊழல் ஆட்சியை மாற்றி நல்லாட்சிக்கான தூய்மையான எண்ணத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தை கட்டியெழுப்பியது கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகளை மீண்டும் மேற்கொள்வதற்கு அல்ல என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இணக்க அரசாங்கம் என்ற வகையில் நல்லாட்சி எண்ணக்கருவை நோக்கியும் சமூக நீதியை நிறைவேற்றுவதற்காகவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்பதுடன், சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டுமென்றும் தவறிழைத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அப்பதவியிலிருந்து விலகிச் செல்வதற்கு தயாராகவேயாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் மேற்கொள்கின்ற சரியான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அரசாங்கத்தில் உள்ள அனைவரினதும் பொறுப்பாகுமென்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 08ஆம் திகதி மூன்று வருடங்கள் நிறைவடையவுள்ள நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நல்ல விடயங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென்பதுடன், அரசாங்கத்தின் சில தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தவறுகளை சரி செய்துகொண்டு சிறந்த ஆட்சியை முன்னெடுப்பதற்கு இன்னும் சந்தர்ப்பம் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரருக்கு வழங்கக்கூடிய உயர்ந்த கௌரவம் அவரது தொலைநோக்காகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்த நீதியான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்ற சுற்று வட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித்ததேரரின் உருவச் சிலைக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து அபேகம வளாகத்தில் பிரதான ஞாபகார்த்த நிகழ்வு இடம்பெற்றது. 

கோட்டே ஸ்ரீ கல்யானி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகா நாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர், சங்கைக்குரிய வெலமிட்டியாவே குசலதம்ம தேரர், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்தன தேரர், சங்கைக்குரிய தீனியாவல பாலித்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், சபா நாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகள், சிவில் நிறுவனப் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.