ஏழு வார காலம் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பமே சற்றுத் தடுமாறியிருக்கிறது. இன்று (8) டெல்லி போய்ச் சேர்ந்த இலங்கைக் குழாமில், விசா பிரச்சினையால் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீர கலந்துகொள்ளவில்லை.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கடந்த நான்காம் திகதி இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர நியமிக்கப்பட்டார். தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் வசித்து வரும் திலான், இந்திய சுற்றுப் பயணத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் (6) இலங்கை வந்து சேர்ந்தார்.

இலங்கையில் பயிற்சி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட போதிய கால அவகாசம் இல்லாத நிலையில், அவுஸ்திரேலியா சென்றதும் பயிற்சிகளை ஆரம்பிக்க திலான் எண்ணியிருந்தார்.

எனினும், இரண்டு நாட்களுக்குள் அவருக்கு இந்திய விசா கிடைக்காததையடுத்து, இலங்கை அணியினருடன் அவரால் இந்தியா செல்ல முடியவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவருக்கு விசா கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் கிடைக்கும் பட்சத்தில் அவர் உடனடியாக இந்தியா புறப்படுவார் என்று கூறப்படுகிறது.