சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சராக 2015 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட நாள் தொடக்கம் முஹமட் பின் சல்மான் அந்த இராச்சியம் தனது சிந்தனையின் வழியிலேயே ஆட்சி செய்யப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக - பொறுமை இழந்து செயட்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

தனது தந்தையார் மன்னர் சல்மான் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டரை வருடங்களுக்கு பிறகு கடந்த ஜூன் மாதத்தில் அவர் முஹமட் பின் நயேவை ஓரங்கட்டி விட்டு முடிக்குரிய இளவரசராகிக் கொண்டார். (நயேவ் மன்னர் சல்மானின் பெறாமகனாவார்.)

அண்மைய வாரங்களில் முஹமட் பின் சல்மான் சலாபி மத பீடத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் பெரும் கோடீஸ்வரர் அல் வாலீத் பின் தலால் மற்றும் தேசிய காவலர் படையின் பலம் பொருந்திய தலைவர் முத்தாய்ப் பின் அப்துல்லா உட்பட 11 இளவரசர்களையும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அதிகாரிகளையும் கைது செய்வதற்கு உத்தரவிட்டு இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.  கைதுகளுக்கான உடனடிக் காரணம் முதலில் தெரியவில்லை என்ற போதிலும், மன்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நோக்குகையில், இளவரசர் முஹமட் பின் சல்மானால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஊழலுக்கு எதிரான புதிய நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே கைதுகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அண்மைய கடும் நடவடிக்கைகள் எல்லாமே முடிக்குரிய இளவரசர் தனது அதிகாரத்தை வலுப்படுத்துகின்றார் என்பதையே வெளிக்காட்டுகின்றன.

முதலில் அவர் முடிக்குரிய இளவரசராக தான் வருவதற்கு குறுக்கே நின்ற இளவரசர் நயேவை நீக்கச் செய்தார். சவூதி அரச குடும்பத்தவர்கள் மத்தியில் மிகவும் பெரிய தனவந்தர்களில் ஒருவராக விளங்கும் இளவரசர் அல் வாலித் மேற்கு நாடுகளின் அரசாங்கங்களுடன் சொகுசான உறவைக் கொண்டவர் என்பதுடன் பழமைவாத கருத்துக்களை பெருமளவுக்கு கொண்டவராகவும் இல்லை. காலஞ் சென்ற மன்னர் அப்துல்லாவின் தனிப்பாசத்துக்குரிய மகனான இளவரசர் முத்தாய்ப் அரச மாளிகைக்குள் செல்வாக்கு மிக்க ஒரு புள்ளியாவார். அவர்கள் இருவரையும் கைது செய்ததன் மூலமாக முடிக்குரிய இளவரசர் முஹமட் பின் சல்மான் எதிர் காலத்தில் தனக்கு சவாலைத் தோற்றுவிக்கக் கூடிய பண பலம் கொண்ட மையத்தையும் அதிகார மையத்தையும் வலுவிழக்கச் செய்திருக்கிறார் என்று கூறலாம்.

இந்தக் கைதுகளையடுத்து இளவரசர் முஹமட் பின் சல்மான் பல தசாப்தங்களுக்குப் பிறகு சவூதியில் முன்னிலைக்கு வந்திருக்கும் மிகவும் பலம் பொருந்திய ஒரு முடிக்குரிய இளவரசராக அதுவும் 32 வயதில் தன்னை நிலை நாட்டிக் கொண்டுள்ளார் என்றே தெரிகிறது. முக்கியமான கொள்கைத்தீர்மானங்கள் நடைமுறையில் அவரின் பொறுப்பின் கீழேயே மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் இராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு, தேசிய காவல் படை என்று சவூதியின் பாதுகாப்பு சேவைகளின் சகல கிளைகளும் அவரின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றன. மன்னரின் பெருவிருப்புக்குரியவராகவும் அவர் விளங்குகின்றார். எது எவ்வாறிருப்பினும் அவர் ஆபத்தான ஒரு விளையாட்டிலேயே இறங்கியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை.  கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் அதிகார உட்சண்டையில் ஒரு குறுகிய கால கட்டத்திற்குள் பல முனைகளை அவர் திறந்து விட்டிருக்கின்றார்.

சவூதி அரேபியாவில் ஆட்சியாளர்கள் பாரம்பரியமாக ஒரு சமநிலை பேணும் தந்ரோபாய ஏற்பாடாக அரச குடும்பத்தின் வெவ்வேறு கிளைகள் மத்தியில் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வார்கள். அவர்களின் முடிவுகளுக்கு  நியாயப்பாட்டை பெற்றுக்கொள்வதற்காக அவற்றுக்கு உலமாவின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால் முடிக்குரிய இளவரசரின் நடவடிக்ககைகள் எல்லாம் அந்தப் பாரம்பரியத்தைத் தலை கீழாக்கியிருப்பதைக் காணக்கூயதாக இருக்கிறது. தனது கைகளில் அதிகாரங்களை குவித்துக் கொண்டு ஏனயை இளவரசர்களுக்கும் சில மதத் தலைவர்களுக்கும் எதிராக திரும்பியதன் மூலமாக அவர் சவூதியின் ஆட்சி ஒழுங்கு முறையின் சமநிலையைக் குழப்பியிருக்கின்றார் என்று தான் கூற வேண்டும். விரைவாக அவர் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டிருப்பதால் ஆட்சி முறையின் பாணியை அவர் மீள் வடிவமைக்கக் கூடிய சூழநிலைதோன்றியிருக்கக் கூடும். ஊழலுக்கு எதிரான அவரின் நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் ஆதரவு கிடைக்கும். அதனால் அவர் தனது போட்டியாளர்களை இலக்கு வைப்பதற்கு அந்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

ஆனால், அவரின் கடந்தகாலச் செயற்பாடுகளில் சாதனைகள் என்று குறிப்பிடக் கூடியதாக எதுவுமில்லை என்று அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான அவரின் பேரார்வமிக்க திட்டம் முன்னோக்கி நகர்ந்ததாக இல்லை. அவரின் வெளியுறவுக் கொள்கை நகர்வுகளும் திருப்பித் தாக்கியிருக்கின்றன, யேமன் போர் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விரிவடைந்து கொண்டிருக்கிறது. சிரியாவின் உள்நாட்டுப் போர் சவூதி ஆட்சியாளர்களின் ஒரு எதிரி என்று நோக்கப்படுகின்ற ஜனாதிபதி பஷார் அல் - அசாத்திற்கு அனுகூலமான முறையில் திரும்பிக் கொண்டிருக்கிறது.

முடிக்குரிய இளவரசர் தொடர்ந்தும் தவறுகளைச் செய்து கொண்டிருப்பாரேயானால் எல்லாமே கோணலாகி சவூதி அரச குடும்பத்துக்குள் வெளிப்படையான அதிகாரப் போராட்டம் மூண்டுவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது.

மேற்காசியாவில் சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டா போட்டி மீண்டும் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில்  மேற்கூறப்பட்ட நிகழ்வுப்போக்குகள் எல்லாம் சவூதி அரேபியாவுக்கும் அப்பால் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன என்று சர்வதேச அரசியல் அவதானிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

(வீரகேசரி இணையத்தள செய்தி ஆய்வுகள்)