தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை - அட்டன் பிரதான வீதியில் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற லொறி விபத்தில் 11 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த லொறியானது அட்டன் வெலிஓயாவிலிருந்து தங்கக்கலை நோக்கி பயணித்த வேளையிலேயே தாவாக்கலை தோட்டத்தேயிலை தொழிற்சாலைக்கருகிலுள்ள மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது இதில் பயணித்த அனைவரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவர்களில் இருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையிலும் 4 பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையிலும் எஞ்சிய 5 பேர் கொட்டகலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே குறித்த விபத்து சம்பவித்ததாக சாரதி தெரிவித்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலவாக்கலை  பொலிஸார் தெரிவித்தனர்.