சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரில் அமைந்திருக்கும் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை மாற்ற தற்போதைய இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவுக்கு, தமிழக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

மேற்படி அரசின் பெயர் மாற்றும் முயற்சியைக் கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இலங்கை ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடாமல் போராடி, தமிழர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டிய மலையக மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் தொண்டமான். அவரது பணியைப் போற்றும் வகையிலேயே தொண்டமான் தொழிற்பயிற்சி மையம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

அத்தகைய போற்றுதலுக்குரிய தலைவரின் பெயரை இருட்டடிப்புச் செய்ய தற்போதைய அரசு முயன்றுவருவது எம்மை அதிர்ச்சியடையச் செய்திருப்பதுடன் அவரை அவமதிப்புச் செய்வதாகவே இருக்கிறது.

பேரினவாத அரசின் இந்த முயற்சி உடனே கைவிடப்படவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இலங்கையின் ஒப்பற்ற தலைவர் என்று பல்வேறு நாடுகளின் தலைவர்களால் பாராட்டப்பெற்ற சௌமியமூர்த்தி தொண்டமான் பெயர் சூட்டப்பட்டிருந்த அரச நிறுவனங்களில், அவரது பெயர் திட்டமிட்டு நீக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது.

நலிவுற்ற தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்பட தொழிற்பயிற்சித் திட்டங்களையும் சுயதொழில் வாய்ப்புகளையும் பல்கலைக்கழக கலாச்சாரப் படிப்பு, நிதியுதவித் திட்டங்கள் எனப் பல்வேறு திட்டங்களுக்கு வலிகோலியவர் தொண்டமான். அவரது பெயரை நீக்கிவிட்டு வேறு பெயர்களைச் சூட்டியிருப்பது தமிழ் சமுதாயத்தை அவமதிப்பது போலாகும்” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பால்தான் இலங்கையின் பொருளாதாரம் இவ்வளவு தூரத்துக்கு உயர்ந்திருக்கிறது. அவ்வுழைப்பாளர்களின் ஒரே உரிமைக் குரலாக ஒலித்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான்.

அவரது பெயரால் இயங்கிவரும் நிறுவனங்களின் பெயர்களை திடீரென்று எந்தவித காரணமும் இன்றி மாற்றுவதற்கு இலங்கை அரசு எடுத்திருக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

மேலும், இந்நிறுவனங்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழரின் தன்னிகரற்ற தலைவராக விளங்கிய தொண்டமானின் பெயரை மேற்படி நிறுவனங்களுக்கு மீண்டும் சூட்டி அவரையும் தமிழர்களையும் பெருமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலையக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான அவரின் அளப்பரிய அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், மத்திய மாகாணத்தில், “தொண்டமான் தொழிற்பயிற்சி மையம்”, “தொண்டமான் கலாச்சார மன்றம்”, “தொண்டமான் மைதானம்” என சில அரசு நிறுவனங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளன. இவற்றில், தொண்டமான் தொழிற்பயிற்சி மையத்திற்கு இந்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சௌமியமூர்த்தி தொண்டமான் இந்திய வம்சாவழி தமிழர்களுக்கான தலைவராகச் செயல்பட்டார் என்றாலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் பூர்வீகத் தமிழர்களின் மொழியுரிமைகள் மற்றும் இனஉரிமைகளுக்காகவும் குரலெழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தகைய போற்றுதலுக்குரிய தமிழர் தலைவரான அவரது பெயரை, மேற்சொன்ன மையங்கள் மற்றும் மைதானத்தின் பெயர்களிலிருந்து தற்போது இலங்கை ஆட்சியாளர்கள் நீக்கியுள்ளனர். அவரது பெயருக்குப் பதிலாக அந்தந்தப் பெயரை இணைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழர்களுக்காக தமது இறுதி மூச்சு வரையில் பாடுப்பட்ட தொண்டமான் அவமதிப்பதாக இந்நடவடிக்கை அமைந்துள்ளனது. என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தகவல்: சென்னை அலுவலகம்