திருமணத்தை பின் தள்ளி போட்டதிற்காக தனது காதலியை தாக்கிய காதலனை 50,000 ரூபா சரீர பிணையில் விடுதலை  செய்யுமாறு கொழும்பு மஜிஸ்திரேட் துலானி அமரசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் தெமட்டகொடையைச் சேர்ந்த 22 வயதுடைய சக்திவேல் செந்தில் குமார் எனும் இளைஞராவார்.

மீண்டும் குறித்த பெண்ணிற்கு ஏதாவது வகையில் துன்புறுத்தினாலோ அல்லது அழுத்தம் கொடுத்தாலோ குறித்த இவ் வழக்கு முடியும் வரை தடுப்பு காவலில் சிறை வைக்கப்படுவார் என அறிவுறுத்தப்பட்ட பின்னரே குறித்த இளைஞர் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தவர் கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வரும் 20 வயதுடைய குறித்த இளைஞனின் காதலியாவார்.

கொட்டாஞ்சேனை பகுதியில் நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் குறித்த பெண் தான் காதலித்த காதலனை இவ் வருட இறுதியில் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்திருந்துள்ளார். பின்னர் குறித்த பெண் திருமணத்தை அடுத்த வருடம் செய்வோம் என காதலனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தனது காதலி திருமணத்தை நாளுக்கு நாள் தள்ளி போட்டுக்கொண்டே செல்வதால் கோவமடைந்த காதலன் ஏன் இவ்வாறு செய்கிறாய்? என கேட்டு காதலியின் கன்னத்தில் தாக்கியுள்ளார் இதனால் காயமடைந்த காதலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.