தி.மு.க. தலைவர் கருணாநிதியை இந்தியப் பிரதமர் மோடி அவரது இல்லத்தில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்துள்ளார்.

இந்தியாவின் நாளிதழான தினத்தந்தியின் பவளவிழாவில் பங்கேற்பதற்காக சென்னைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 12 மணியளவில் கோபாலபுரத்திலுள்ள மு. கருணாநிதியின் இல்லத்திற்கு நரேந்திர மோடி சென்று கருணாநிதியின் கையைப்பற்றிப் பிடித்து நலம் விசாரித்தார்.

கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் ஆகியோர் வரவேற்றனர்.

நரேந்திர மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பா.ஜ.கஇவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்றிருந்தனர்.

பிரமதர் மோடி வருகையை ஒட்டி ஏராளமான பா.ஜ.க. மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கோபாலபுரத்திற்கு சென்றிருந்தனர்.

மோடி புறப்பட்டுச் சென்றவேளை, தி.மு.க. தலைவர் கருணாநிதி, அங்கு கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தமை குறிப்பிடத்தக்கது.