பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கப்பலான பி.என்.எஸ். சாய்ப் நான்கு நாட்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தானிய கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் மரபு ரீதியான வரவேற்பளித்தனர்.

பி.என்.எஸ். சாய்ப் என்ற பாகிஸ்தானிய போர்க்கப்பலானது 123 மீற்றர் நீளத்தையும் 13.2 மீற்றர் அகலத்தையுமுடையது. 3,144 தொன் கொள்ளளவுடையதுமான குறித்த கப்பலில் 225 சிப்பந்திகள் பணியாற்றுகின்றனர்.

பி.என்.எஸ். சாய்ப் என்ற ஸ்வோர்ட் வகையைச் சேர்ந்த சீனத் தயாரிப்பு போர்க்கப்பலே கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

இரு நாடுகளினது கடற்படைகளுக்கும் இடையிலான பலமான மரபுசார், நல்லெண்ண மற்றும் பயிற்சிகள் நோக்கில் இலங்கை வந்துள்ள  பி.என்.எஸ். சாய்ப்  என்ற போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் போது, இலங்கை கடற்படையினருடன் பல்வேறு நிபுணத்துவ பயிற்சி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் பாகிஸ்தானிய போர்க்கப்பலான பி.என்.எஸ். சாய்ப் எதிர்வரும் 8 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.