இலங்கை தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளைக்குழு கூட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இன்றையதினம் நடைபெற்றது.

கரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின் தெரிவுக்கூட்டம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மூலகிளைக்குழு கூட்டம் என்பன இன்றையதினம் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் முன்னதாக கரைதுறைப்பற்று பிரதேச கூட்டம் முல்லைத்தீவு பிரதேச செயலக பொது மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன்,மாவை சேனாதிராஜா,சிவமோகன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கூட்டத்தின் ஆரம்பம் முதலே புதிய உறுப்பினர் தெரிவில் இழுபறி நிலைகள் காணப்பட்டதோடு குழப்பமும் நிலவியதை அவதானிக்கமுடிந்தது. இந்த குழப்ப நிலை காரணமாக இடையில் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் விலகி சென்றதை அவதானிக்கமுடிந்தது.

ஒருவகையான பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சமாதான படுத்தலின் பின்னர் குழப்பம் தணிவடைந்ததோடு தற்காலிகமாக புதிய உறுப்பினர்கள் கரைதுறைப்பற்று கிளைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டதோடு கூட்டம் நிறைவடைந்தது.

இருந்தபோதிலும் கூட்டத்தின் உள்ளே குழப்பத்தில் ஈடுபட்ட கட்சியின் ஆதரவாளர்கள் கூட்டம் நிறைவடைந்தபின்னர் வெளியே குழப்பத்தில் ஈடுபட்டதுடன் கைகலப்பில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது.