இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலர் 

Published By: Priyatharshan

05 Nov, 2017 | 02:08 PM
image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் தோமஸ் செனொன் இலங்கை வருகின்றார். 

நாளை  திங்கட் கிழமை இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் விஷேட கலந்துரையாடல்களிலும் ஈடுப்படவுள்ளார். 

அதே போன்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

மேலும் திங்கட்கிழமை மாலை 7.30 மணிக்கு வெளிவிவகார அமைச்சில் கூட்டு ஊடக சந்திப்பிலும் கலந்துக்கொள்ளவுள்ளார். 

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் தோமஸ் செனொன் இலங்கை விஜயத்தை இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பங்களதேஷ் மற்றும் இலங்கைக்கு அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் விஜயம் செய்ய உள்ளதாகவும் அந்நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.

இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களில் பொறுப்புக்கூறல் மற்றும் மீள்நிகழாமையை மையப்படுத்திய விடயங்களில் அரசியல் தீர்வு விவகாரத்தை கையாள்வதற்கான வழிமுறையில் புதிய அரசியலமைப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலரின் இலங்கை விஜயத்தின் போது அரச மற்றும் எதிர் கட்சியுடனான சந்திப்புகளின் போது ஜெனீவா தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்து அவதானம் செலுப்பட உள்ளது. 

குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் உத்தேச புதிய அரசியலமைப்பு விவகாரம் குறித்து முக்கிய விடயங்களை கேட்டறியவுள்ளார். உள் நாட்டில் பல தரப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன் அடுத்த கட்ட நகர்வு குறித்து அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர்  அரச தரப்பினரிடம் கேட்டறிவாரென எதிர்பார்க்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்