தமிழரசு கட்சி தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக செயற்படுவதுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு மாறாகவும் செயற்படும் நிலையில் தமிழரசு கட்சியுடன் இனிவரும் காலங்களில் இணைந்து செயற்படுவதில்லை எனவும் தமிழரசு கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தீர்மானித்திருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சமஷ்டி என்பது பேசப்படவில்லை. அதே சமயம் வடகிழக்கு இணைப்பும் பேசப்படவில்லை. அந்த அரசியலமைப்பை தமிழரசு கட்சி ஆதரித்துள்ளது. அதேபோல் புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன் உரிமை என்பதையும் தமிழரசு கட்சி எந்த எதிர்ப்பும் இல்லாமல் அப்படியே ஏற்று கொண்டிருக்கின்றது.

 

ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது வடகிழக்கு இணைப்பு அந்த வடகிழக்கு தமிழர்களின் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அந்த கொள்கைகளுக்கு மாறாகவே தமிழரசு கட்சி செயற்பட்டு வருகின்றது.

 

அதே சமயம் பௌத்த மதத்திற்கு முன் உரிமை என்பதை தமிழரசு கட்சி எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆதரிக்கிறது. பௌத்ததிற்கு முன் உரிமை என்பதற்கு மக்கள் ஆணை வழங்கினார்களா? இவ்வாறான நிலையில் தமிழரசு கட்சியுடன் இனிமேல் இணைந்து செயற்படுவதில்லை என்னும் தீர்மானத்தை நாம் எடுத்திருக்கிறோம்.

 

மேலும் தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதும் இல்லை. அதற்காக நாங்கள் தமி ழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகியதாக அல்லது வெளியேறியதாகவும் இல்லை.