அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அட்டன் குடாகம பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக  அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்டனிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற சிறிய ரக லொறி ஒன்றும், நுவரெலியாவிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறிய ரக லொறியில் சென்ற இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில்  டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டன் பொலிஸார் இப்பகுதியில் சீரற்ற காலநிலையினால் பிரதான வீதியில் வழுக்கல் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த இரு வாகனங்களும் அதிக வேகத்துடன் பயணித்ததனால் இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும் தெரிவித்த நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.