யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அரியாலை மனியதோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரை சுட்டு கொன்று விட்டு தப்பிச் சென்றமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு விசார‍ணை குழுவினர் கைது செய்துள்ளனர். 

யாழ். விசேட அதிரடி படை முகாமின் கீழ் பண்னை வீதி முகாமில் கடமையாற்றி வந்த உபபொலிஸ் பரிசோதகர் மல்லக ஆராச்சிகே பிரதீப் நிஷாந்த காண்ஸ்டபிலான ரத்னாயக்க முதியன்சலாகே இந்திக புஷ்பகுமார ஆகியோரையே இன்று நண்பகல் 12,30 மணியளவில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டினை முன்னெடுத்தமை ஒருவரை சுட்டுக்கொலை செய்தமை. கொலையில்  பின்னர் சாட்சியங்களை அழிக்க முற்பட்டமை, தப்பிச் சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக சந்தேகத்தின் அடிப்படையில் இவ்விருவரையும் கைது செய்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் கேசரியிடம் தெரிவித்தார்.