சுகபிரசவத்திலோ அல்லது சிசேரியனிலோ, பிறந்த குழந்தைக்கு இரண்டு மாதத்தற்கும் குறைவாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் குழந்தைகள் SIDS (Sudden Infant Death Syndrome) என்ற பாதிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. இந்த பாதிப்பு வராமல இருக்கவேண்டும் எனில் பிறந்த குழந்தைக்கு குறைந்த பட்சம் 6 மாதம் வரை தாய்ப்பாலை கொடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதன் மூலம் குழந்தை ஆஸ்துமா பாதிப்பிலிருந்து பாதுகாப்பதுடன், தாயின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. இதனால் உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு பெண்களும், குழந்தை பிரசவித்த பின்னர் குறைந்த பட்சம் 6 மாதம் வரை தாய்ப்பால் புகட்டவேண்டும் என்ற விழிப்புணர்வை முன்னெடுக்கிறது.

தாய்ப்பால் கிடைக்காத அல்லது போதிய அளவிற்கு கிடைக்காத குழந்தைகள் தான் தூக்கத்தில் எதிர்பாராமல் காரணமற்ற வகையில் இறக்கவும் நேரிடுகிறது. அதிலும் குறிப்பாக பிறந்து ஒரு மாதத்திலிருந்து ஒராண்டு வரையிலான குழந்தைகள் தான் இந்த பாதிப்பிற்கு ஆளாகுவதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்த SIDS (Sudden Infant Death Syndrome) என்ற பாதிப்பு குழந்தைகளை தாக்கியவுடன், தூங்கிக் கொண்டிருக்கும் போது மூளையின் செயல்பாட்டை தவறுதலாக தூண்டிவிடுகிறதாம்.

பொதுவாக பிறந்த குழந்தையின் பசி மற்றும் சுவாசிப்பதற்கான தேவையான ஓக்ஸிஜன் குறித்து மூளை கட்டளை பிறப்பிக்கும். குழந்தை அழும், அப்போது அதற்கு தேவையான விடயங்கள் கிடைத்துவிடும். ஆனால் SIDS பாதிப்புள்ள குழந்தைகளுக்கு இந்த தொடர்பில் மாறுபாடு ஏற்பட்டு, குழந்தைக்கு தேவையான ஓக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாகவே அந்த குழந்தை அபாய கட்டத்தை எட்டுகிறது.

இந்த பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிலும் குழந்தை வயிற்றில் இருக்கும் போது புகைப்பது, மது அருந்துவது போன்றவைகளாலும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும்.  குழந்தை பிறந்து ஓராண்டு வரை அக்குழந்தை பெற்றோர்களின் ஆரோக்கியமான பாதுகாப்பிலும், அரவணைப்பிலும் இருக்கவேண்டும். அதனுடைய தூக்கத்தை ஆரோக்கியமான சூழலில் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும். தற்போது பெரும்பாலானவர்கள் தங்களின் குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருப்பதற்காக டயாபரை அணிவித்து விடுகிறார்கள். இதுவும் தவிர்க்கப்படவேண்டும். 

டொக்டர் பத்மா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்