நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல் மற்றும் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல் தொடர்பான விசேட அமைச்சரவைப் பத்திரம் நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஜனாதிபதி  தெரிவித்தார்.

maithiripala

மிகவும் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் புதியதொரு தேர்தல்  முறையினை அறிமுகப்படுத்துவதற்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி ஜனாதிபதியிடம் உள்ள அதிகாரங்களை பாராளுமன்றத்திடமும் சுயாதீன ஆணைக்குழுக்களிடமும் ஒப்படைப்பதே தனது எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த 2000 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை சான்றுப் பத்திரங்களை வழங்குவதற்காக இன்று  முற்பகல் அலரிமாளிகையில்  இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் பிரகடனத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி, புதியதொரு அரசியல் அமைப்பினை உருவாக்குவது தொடர்பாகவும் தற்போது தேவையான  கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் தொடர்பில் 40 ஆண்டுகளுக்கும் மேல்  பேசப்பட்டு வந்த தேர்தல் ஆணைக்குழுவினை நிறுவுவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறே மனித உரிமைகள், அரச சேவைகள், நீதிமன்றங்கள், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றுடன் தொடர்பான நிறுவனங்களை ஸ்தாபிப்பதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதிய அரசு பதவியேற்று 7, 8 ஆண்டுகள் கடந்துள்ளதைப் போன்று அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் பற்றி சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
நான் ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவாகி பாராளுமன்றத்தில் உள்ள அனைவரதும் ஒத்துழைப்பில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அங்கீகரித்து ஆகஸ்ட் 17ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்தி புதியதொரு அமைச்சரவையினை நியமிப்பதற்கு 10 மாதங்கள் மாத்திரமே சென்றுள்ளது.

அது மட்டுமன்றி மக்களின் வறுமையை இல்லாதொழித்தல், நாட்டில் சுதந்திரம், சமாதானம், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், இலவச சுகாதாரம், இலவசக் கல்வியை மேம்படுத்துதல், சர்வதேச உறவுகளை விருத்திசெய்தல், விவசாயிகளினதும் சாதாரண பொது மக்களினதும் தலாவருமானத்தை அதிகரித்தல்  உள்ளிட்ட நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மைகருதி தற்போது பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துச் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு இன்று பலரும் அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர் . அவர்கள் அன்று கதைப்பதற்கு பயப்பட்ட அமைச்சரவை அங்கத்தவர்கள் சிலர் இன்று அரசாங்கத்திற்கு எதிராக கதைப்பதற்கு காரணம் தற்போது வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரமாகும்.

எவ்வாறாயினும் தற்போதுள்ள சுதந்திரத்தை அனுபவிக்கும்போது சுயகட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் செயற்பட்டு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தினைப் பாதுகாத்து தேசத்தின் முன்னேற்றத்திற்காக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டம் தொடர்பான புரிந்துணர்வுடனும் நட்புறவுடனும் ஒன்றிணைவது நம் அனைவரதும் பொறுப்பாகும்.

நாட்டில் மேற்கொள்ளப்படும் இப்புதிய மாற்றங்களின்போது உலகில்  அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் அணிதிரண்டு பண்பட்ட ஒரு தேசமாக நாட்டைக் கட்டியெழுப்புதல் புதிய அரசின் நோக்கமாக உள்ளதென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.