தலவத்துகொடையில் இன்று (2) பிற்பகல் 1 மணியளவில் நகைக் கடை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

நகைக் கடையொன்றினுள் திடீரெனப் புகுந்த மர்ம நபர்கள், தம் வசமிருந்த துப்பாக்கிகளைக் காட்டி கடை உரிமையாளரை அச்சுறுத்தினர்.

எனினும், சுதாகரித்துக்கொண்ட கடை உரிமையாளர், தன் வசமிருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து மர்ம நபர்களை எதிர்த்து மல்லுக்கட்டினார்.

இதையடுத்து, மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால், கடை உரிமையாளர் காயமடைந்தார்.

காயமடைந்த அவரை அப்படியே விட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

காயப்பட்ட கடை உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தலவத்துகொடை பொலிஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.