ஈராக்கில் இன்னொரு உள்நாட்டு போர் ஆபத்து ?

Published By: Priyatharshan

01 Nov, 2017 | 04:53 PM
image

எண்ணெய் வளமுடைய கிர்குக் நகரில் கடந்த மாதம் ஈராக் அரசாங்க துருப்புகளுக்கும் ஈராக்கிய குர்திஷ்தானின் இராணுவப்பிரிவான பெஷ்மெர்கா படைகளுக்கும் இடையில் மூண்ட மோதல் அந்த நாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற பிளவுகளை நினைவுப்படுத்துகிறது. அரசாங்கத்  துருப்புகள் ஷியா முஸ்லிம் திரட்டல் படைகளின் உதவியுடனேயே தாக்குதல்களை மேற்கொண்டன.

அரசாங்கத் துருப்புகளும் பெஷ்மெர்கா படைகளும் ஈராக்கில் இஸ்லாமிய அரசு இயக்கத்தை (IS) எதிர்த்துப் போராடுகின்ற கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. அவை அமெரிக்காவின் நேச சக்திகளாகவும் விளங்குகின்றன. இஸ்லாமிய அரசு இயக்கத்துக்கு எதிரான போரில் விமானத்தாக்குதல்களை நடத்தி உதவி வருகின்ற அமெரிக்கா ஈராக் இராணுவத்துக்கு ஆயுதங்களை விநியோகிப்பதற்கு அப்பால் ஈராக் படைகளுக்கு இராணுவ ரீதியான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றது. 

அதேபோன்றே பெஷ்மெர்கா படைகளும் அமெரிக்கா, ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம் மற்றும் மேற்கு நாடுகளிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றிருக்கிறது. ஈராக்கிய குர்திஷ்தானின் தலைநகரான இர்பிலில் அமெரிக்கா துணைத்தூதரகம் ஒன்றையும் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான அமெரிக்க இராஜதந்திரிகளும் அவர்களின் குடும்பங்களும் இர்பிலில் வசித்து வருகின்றனர்.

ஈராக்கியத் துருப்புகளும் பெஷ்மெர்கா படைகளும் அமெரிக்காவின் நேசசக்திகளாக  இருக்கின்றன என்ற பொதுவான அம்சமோ அல்லது இஸ்லாமிய அரசு இயக்கத்துக்கு எதிரான போரில் அவை பொதுவான நலன்களைக் கொண்டிருக்கின்றன என்ற அம்சமோ கிர்குக்கில் இருதரப்பினருக்கும் இடையில் மோதல் மூளுவதைத் தடுக்கமுடியவில்லை. 2014 ஆம் ஆண்டில்  கிர்குக் நகரை  இஸ்லாமிய அரசு இயக்கத்தவர்களிடமிருந்து பெஷ்மெர்கா படைகள் கைப்பற்றியிருந்தன. குர்திஷ்களுக்கும்  பாக்தாதிற்கும் இடையிலான கூட்டணி கேந்திர முக்கியத்துவ  நலன்களை  அடிப்படையாகக் கொண்டதல்ல. அது தந்திரோபாய  ரீதியில் நடைமுறை  வசதியை நோக்கமாகக் கொண்டதேயாகும்.

2014ஆம் ஆண்டில் பலூஜா, ரமாடி, கிர்குக் மற்றும் மொசூல் ஆகிய நகரங்கள் உட்பட ஈராக்கில் இஸ்லாமிய அரசு இயக்கம் தொடர்ச்சியான பல இராணுவ வெற்றிகளை கண்டபிறகு பாக்தாதையும் இர்பிலையும் நோக்கி இஸ்லாமிய இயக்கம் முன்னேறக்கூடிய சாத்தியம் இருப்பதாக அஞ்சப்பட்டது. அப்போது தங்களுக்கிடையிலான வரலாற்று ரீதியிலான வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஈராக்கிய துருப்புக்களும் குர்திஷ்  பெஷ்மெர்கா படைகளும்  பொது எதிரிக்கு எதிராக இணைந்து போரிட்டன.  இஸ்லாமிய அரசு இயக்கப் படைகள் பின் வாங்கிக் கொண்டேயிருந்தன. அந்த இயக்கத்தினால் கைப்பற்றப்பட்ட பெரும்பாலான நகரங்கள் (ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் உட்பட) விடுவிக்கப்பட்டன. இஸ்லாமிய அரசு இயக்கத்தின் அச்சுறுத்தல் தணிந்து கொண்டு போகத் தொடங்கியதும் ஈராக் அரசாங்கத் துருப்புகளுக்கும் பெஷ்மெர்காக்களுக்கும் இடையிலான வெடிப்புகள் அம்பலமாகத் தொடங்கின.

மிகவும் அண்மையில் ஈராக்கிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர நாடாகுவதற்கு குர்திஷ் அரசியல் தலைமைத்துவம் மேற்கொண்ட முயற்சி பாக்தாதை கலவரமடையச் செய்தது.  ஈராக்கிய  குர்திஷ்தானின்  ஜனாதிபதி மசூத் பர்சானி  இஸ்லாமிய அரசு இயக்கத்துக்கு எதிரான போரினால் தோற்றுவிக்கப்பட்ட சூழ்நிலையை  குர்திஷ்  சுதந்திரத்துக்கு வசதியாக மாற்றிக் கொள்வதில் நாட்டம் காட்டினார். பாக்தாதில் இருந்தும் மேற்குலக நாடுகளின் தலைநகரங்களிலிருந்தும் காண்பிக்கப்பட்ட எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும்,  பர்சானி  செப்டம்பர் 25 சர்வசன வாக்கெடுப்பை  நடத்தினார். அதிகப் பெரும்பான்மையான குர்திஷ் மக்கள் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த வாக்கெடுப்புக்கு குர்திஷ் பிராந்திய அரசாங்கம் சட்டரீதியாகக் கட்டுபட வேண்டியதில்லை என்ற போதிலும், எல்லைகளுக்கு அப்பாலும் குர்திஷ் தேசியவாத அரசியலை அது பலப்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

குர்திஷ் நகரை மீளக் கைப்பற்றுவதற்காக ஈராக் பிரதமர் ஹைதர் அல் - அபாடி தனது துருப்புக்களை விரைந்து அனுப்பினார். குர்திஷ்தானுக்கு சுதந்திரத்தை பெறக்கூடிய நிலையில் பர்சானி இல்லையென்பதால் அவரது நகர்வு எதிர்மறையான விளைவுகளையே கொண்டு வந்திருக்கிறது.

இந்த குழப்பகரமான நிலைமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட பர்சானி ஜனாதிபதி  பதவியிலிருந்து  விலகுவதாக அறிவித்தார். அவரின் அந்த அறிவிப்பு நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். புதிய குர்திஷ் தலைவராக வரக்கூடியவருக்கு பர்சானிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு வசீகரமும் அதிகாரமும் இல்லாமல் இருக்கக்கூடும்.  ஆனால், அவர் கடுமையான தேசியவாத அபிலாசைகளைக் கையாள வேண்டியிருக்கும். கிர்குக்கிற்கு துருப்புக்களை அனுப்பியதன் மூலமாக குர்திஷ் பிராந்திய அரசாங்கத்துக்கு பாக்தாத் கடுமையான செய்தியொன்றை அனுப்பிருக்கிறது. பிரிந்து போவதற்கான திட்டங்களை குர்திஷ் இனத்தவர்கள் தொடர்ந்து முன்னெடுப்பார்களேயானால், கடுமையான இராணுவ நடவடிக்கைகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் பிளவு இஸ்லாமிய அரசு இயக்கத்துக்கு இனிப்பான செய்தியாக இருக்கும். ஈராக்கிய அரசாங்கத்துடனும் குரதிஷ்தான் பிராந்திய அரசாங்கத்துடனும் நல்லுறவுகளைக் கொண்டிருக்கும் அமெரிக்காவினால் மாத்திரமே இந்த நெருக்கடியில் உருப்படியாக தலையிட்டு பிணக்குத் தீர்க்க முடியும் என்பதே  சர்வதேச அரசியல் அவதானிகளின் பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது.

குர்திஷ் தேசியவாத இனபிரச்சினையில் இருதரப்புக்கும் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய வேண்டும். அல்லாவிட்டால், ஈராக்கில் இன்னொரு உள்நாட்டு யுத்தம் மூளுவதற்கான வாய்ப்புகள் உயர்வாகவே இருக்கின்றன என்றும் அவதானிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

(வீரகேசரி இணையத்தள செய்தி ஆய்வுத் தளம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04