நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக நான்கு பிரதேச சபைகளை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஃபைஸர் முஸ்தபா இத்திட்டத்தை முன்மொழிந்திருந்தார்.

நோர்வுட், மஸ்கெலியா, அக்கரப்பத்தனை மற்றும் கொட்டகலை ஆகிய பிரதேசங்களுக்கே உள்ளூராட்சி தேர்தல் அதிகார சபையின் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக மேற்படி புதிய பிரதேச சபைகள் அமைக்கப்படவுள்ளன.

நுவரெலியாவில் தற்போது நுவரெலியா மற்றும் அம்பகமுவை ஆகிய இரண்டு பிரதேச சபைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள், சுமார் இரண்டு இலட்சத்து 10 ஆயிரம் பேர் அடங்கலான அம்பகமுவை பிரதேச சபை மூன்று பிரதேச சபைகளாகப் பிரிக்கப்படவுள்ளது.

அதேவேளை, ஒரு இலட்சத்து 90 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நுவரெலியா பிரதேச சபையும் மூன்று பிரதேச சபைகளாகப் பிரிக்கப்படவுள்ளன.