யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் வணிக பீடங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளதால் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் தோன்றியுள்ள அசாதாரண நிலைமை காரணமாக கலை, விஞ்ஞான மற்றும் வணிக பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்படுவதுடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் குறித்த பீடங்களின் மாணவர்கள் உட்பிரவேசிக்க தடைவித்தும் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் பல்கலைக் கழக துணைவேந்தரால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை பிற்பகல் 4 மணிக்கு முன்னர் மாணவர்கள் அனைவரும் வெளியேறுமாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பமான சூழ்நிலை நிலவுவதாகவும் பல்கலைக்கழக சுற்றாடலிலும் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று 2 ஆவது நாளாக கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே பல்கலைக்கழக நிர்வாகம் குறித்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.