டைப் 1 எனப்படும் சர்க்கரை நோயிற்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மூன்றிலிருந்து 5 சதவீதம் வரை அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 90 சதவீதத்தினர் விற்றமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. விற்றமின் டி சத்து போதிய அளவிற்கு எடுத்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு இந்த வகையான பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதும் தெரியவருகிறது. இந்த விற்றமின் டி சத்து, உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மிக சரியாக தூண்டிவிட்டு, டைப் 1 எனப்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.

கணையம் தன்னிடத்தில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களான இஸ்லெட் என்ற செல்களின் உதவியுடன் இன்சுலீனை சுரக்கச் செய்கிறது. மரபணு கோளாறு மற்றும் புறச்சூழல் காரணிகளால் இந்த நோயெதிர்ப்பு செல்கள் பாதிப்பிற்குள்ளாகி, கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலீன் சுரப்பில் மாறுபாட்டையும் சமச்சிரின்மையையும் ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக தாகமெடுப்பதாக கூறுவது, சோர்வு பார்வைத்திறனில் மாற்றம், அதிகப் பசி, வாசனைகளை நுகரும் திறன் அதிகரிப்பு, காரணமற்ற உடல் எடை குறைவு, அவதானிக்க முடியா திடீர் நடத்தை மாற்றம், இயல்பை விட அதிகளவிலான பதற்றம் அல்லது பேரமைதி இது போன்ற அறிகுறிகள் உங்களுடைய பிள்ளைகளிடத்தில் இருந்தால் முதலில் அவர்களின் இரத்த சர்க்கரையளவை பரிசோதனை செய்யுங்கள். அவர்கள் டைப் 1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு சத்தான உணவு, உடற்பயிற்சி, விற்றமின் டி சத்து ஆகியவற்றை தொடர்ந்து அளித்து வரும் போது அவர்கள் நாளடைவில் இதன் பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் பெறுவார்கள்.

டொக்டர் விஜய் விஸ்வநாதன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்