வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வர்த்தக நிறுவன அணிகளுக்கு இடையிலான எம்.சி.ஏ. பிரீமியர் லீக் சிங்கர் கிண்ண 50 ஓவர் நொக் அவுட் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் லசித் மாலிங்க தலைமையிலான ரீஜே லங்கா அணி டக்வேர்த் லூயிஸ் விதிகளின் பிரகாரம் 82 ஓட்டங்களால் எல்.பி. பினான்ஸ் அணியை வெற்றிகொண்டு சம்பியனானது.

எம்.சி.ஏ. மைதானத்தில் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் ஞாயிறன்று தாமதமாகி ஆரம்பிக்கப்பட்ட இறுதிப் போட்டி அணிக்கு 42 ஓவர்களைக் கொண்டதாக அமைந்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ரீஜே லங்கா அணி 38.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.

ஷாலிக்க கருணாநாயக்க (8 சிக்சர்களுடன் 68 ஓட்டங்கள்), சச்சித்ர சேனாநாயக்க (6 சிக்சர்களுடன் 67 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து ரீஜே லங்கா அணியைப் பலப்படுத்தினர். இவ்வணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

பந்துவீச்சில் சஹான் ஆரச்சிகே 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எல்.பி. பினான்ஸ் அணி 25 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

துடுப்பாட்டத்தில் சஹான் ஆராச்சிகே (26), குசல் மெண்டிஸ் (25), பிரியமல் பெரேரா (24 ஆ.இ.) ஆகியோரே 20 க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

லசித் மாலிங்க 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சச்சித்ர சேனாநாயக்க 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.