மலையக மக்களுக்கு அமைத்து கொடுக்கப்படுகின்ற தனிவீட்டு திட்டத்தினூடாக பொருளாதார வறுமையிலிருந்து மாற்றம் பெறும் மக்களாக எதிர்காலத்தில் திகழ வழிசமைக்க உள்ளோம். இன்று வறுமை காரணமாக தங்கள் சிறுநீரகங்களை விற்பனை செய்துவருவதாக மலையக மக்களை அழிவுபடுத்தும் வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கு நாம் இடம் கொடுக்ககூடாது. தன்மானம் உள்ள மலையக மக்களாக வாழும் சந்தரப்பத்தை நாமே உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

அக்கரபத்தனை சின்னதோட்டத்தில் இடம்பெற்ற புதிய கிராமத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்...

ஏறக்குறைய 200 ஆண்டுகளாக வரவழைக்கபட்ட மக்களாக வந்தேறிய மக்கள் என பெயர் பதியப்பட்ட எம் மக்கள் வெள்ளையர்களால் ஒடுக்கப்பட்ட வாழ்வில் குதிரைகட்டும் லயன் அறைகளில் தம் வாழ்வினை அர்த்தமின்றி வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நல்லாட்சி அரசில் ஒரு விடிவு பிறந்துள்ளது. தனி வீடு வாழ்க்கை கிராமத்து மக்கள் என போற்றப்படும் சூழ்நிலையை த.மு.கூ அமைச்சர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதனை ஒற்றுமையுடன் பேணவேண்டும். நிரந்தரமான தனிவீடு திட்டம் சின்னதோட்ட மக்கள் பெரிய கிராமத்தில் வாழும் சந்தர்ப்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தளவிற்கு நீங்கள் அளித்த வாக்கு சக்தி பெற்றுள்ளது. 

நாங்கள் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் படம் போட்டு காட்டினோம். அதை நிறைவேற்றி வருகின்றோம். மலையக மக்களை குறிவைத்து சிறுநீரகங்கள் சூறையாடப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. வறுமை காரணமாக பணத்திற்காக சிறுநீரகங்களை மலையக தொழிலாளர்கள் விற்பனை செய்வதாக தெரிவிக்கின்றனர்.

அண்மைக் காலமாக இடம்பெறும் இந்த சிறுநீரக கடத்தலினால் நமது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது ஒரு திட்டமிட்ட செயலாகும் சிகிச்சைக்கென செல்லும் மலையகத்தினரிடம் சிறுநீரகம் கடத்தப்படுகின்றது. கேட்டால் வறுமையென காரணம் கூறப்படுகின்றது.  இதற்கு இனிமேல் இடம் கொடுக்கபோவதில்லை. மலையக மக்கள் கண்ணுக்கு தெரியாத பின்னடைவில் இருந்து இவர்களை நாம் காப்பாற்றுவோம்.

நம்மில் உள்ள பலவீனத்தை தகர்த்து முன்னேறுவோம். வறுமையிலிருந்து மாற்றம் ஒன்றை உருவாக்க தொழில் பிரச்சினையினை நிவர்த்திக்க படித்த இளைஞர் யுவதிகளுக்கு புதிய தொழில் திட்டத்தினை முன்னெடுக்க எமது கூட்டணி திட்டங்களை ஏற்படுத்தி வருகின்றது.

கூடிய விரைவில் வறுமையில் இருந்து வெளியே வரக்கூடிய நிலையினை நல்லாட்சி அரசாங்கம் ஊடாக வழியினை நாம் செய்வோம். இதன் அடித்தளம் தனிவீடு அமைத்து நல்ல புதிய சிந்தனையுடன் வாழும் நிலையை உருவாக்குவதே காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)