கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில்  கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் சென்ற திஸர பெரேரா தலைமையிலான இலங்கை அணிக்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 வகையான கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு- 20 போட்டி மாத்திரம் பாகிஸ்தானின் லாகூரின் கடாபி மைதானத்தில் நடத்துவதற்கு இரண்டு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகள் முடிவு செய்தன.

திஸர பெரேரா தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி, 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் முதலிரு போட்டிகளை இழந்து தொடரையும் பறிகொடுத்த நிலையில், 3 ஆவதும் இறுதியுமான போட்டியில் விளையாடுவதற்காக சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு நேற்று அதிகாலை லாஹூரின் அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விஜயத்தினை மேற்கொண்ட இலங்கை அணி மீது பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொண்ட காரணத்தினால் பாகிஸ்தானில் எந்தவொரு சர்வதேசப் போட்டிகளும் நடைபெறவில்லை. குறித்த தாக்குதலில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு சிம்பாப்வே அணி மட்டும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரில் விளையாடியிருந்தது.

இதன்படி, சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற உலகின் முன்னணி கிரிக்கெட் அணியொன்று விஜயம் செய்து விளையாடடியமை அந்நாட்டில் மீண்டும் சர்வதேசப் போட்டிகள் இடம்பெறுவதற்கான வரலாற்று சிறப்புமிக்க தருணமாக அமைந்துள்ளது.

திஸர பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணிக்கு லாஹூர் எங்கும் வரவேற்பு பதாதைகள், சிங்கள மொழியில் வரவேற்பு வாசகங்கள் தொங்கடவிடப்பட்டு கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது. அத்துடன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று அதிகாலை 2.25 மணி அளவில் இலங்கை அணி லாஹூரை வந்தடைந்ததையடுத்து, குண்டு துளைக்காத விசேட பஸ் மூலம் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.