அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி சீனியர் ஜோர்ஜ் புஷ் பிரபல நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்காக நடிகையிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஹெதர் லின்ட் என்ற குறித்த நடிகை தனது இன்ஸ்ட்டாகிராமில் 93 வயதான முன்னாள் ஜனாதிபதி அவரது சக்கர நாற்காலியின் பின் புறமாக தனது பிட்டப் பகுதியை வருடியதாக குறிப்பிட்டிருந்தார்.

ஹரிக்கேன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமர் சீனியர் புஷ்ஷின் கையை பற்றிக்கொண்டிருப்பதை கண்டதும் தான் அதிர்ச்சிக்குள்ளாகியே இப் பதிவை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

“நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வரலாற்று தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஊக்குவிக்க புஷ்ஷை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நானும் அப்பொழுது இதே போல் புகைப்படமொன்றிற்காக நின்ற போது அவர் எனக்கு பாலியல் தொல்லை செய்தார். அவர் எனக்கு கைக்கு கை கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக அவரது மனைவி பாபரா அருகிலிருக்கும் இருக்கும் சமயத்தில் பின்புறமாக வருடினார். அவர் எனக்கு மிகவும் மோசமாக கேலி செய்தார். பிறகு நாங்கள் புகைப்படம் ஒன்று எடுக்கும் போது ஒரேடியாக மீண்டும் என்னை வருடினார்.” என்று தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து  சீனியர் ஜோர்ஜ் புஷ் சார்பாக சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு மன்னிப்புக் கோரிய விளக்க அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

”முன்னாள் ஜனாதிபதி புஷ் ஒருபோதும் எந்தச் சூழ்நிலையிலும் வேண்டுமென்றே யாருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையோ அல்லது தகாத நகைச்சுவையையோ கூறியதில்லை. அவ்வாறு தவறுதலாக ஏதேனும் நடந்திருந்தால் திருமதி லிண்ட் அவர்களிடம் உண்மையாகவே மன்னிப்புக் கோருகிறார்” என்று புஷ் சார்பாக மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் பதிவிட்டிருந்த லிண்ட்,

“படத்துக்காக அவருக்கு பக்கத்தில் நான் நின்றிருக்கக்கூடாது என்று அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அவரை திரு ஜனாதிபதி என்று சொல்லும்படி எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நேர்மையான மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு ஜனாதிபதி தனது அதிகாரத்தை உண்மையில் மக்களுக்கு உதவுவதற்கும், நமது ஜனநாயகத்தின் சின்னமாகவும் எடுத்துக்குள்ளவேண்டுமென்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் அவர் அந்த அதிகாரத்தை எனக்கு எதிராகப் பயன்படுத்தியபோது அந்த நேர்மையான நிலையினைக் கைவிட்டுவிட்டார்.” என்று லிண்ட் தனது குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.