இலங்கைக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டியில் 36ஓ ட்டங்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 3-0 எனக் கைப்பற்றி இலங்கையை வெள்ளையடிப்புச் செய்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20  கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் லாகூர் கடாபி விளையாட்டரங்களில் நேற்று இடம்பெற்றது.

கடந்த 8 வருடங்களின் பின்னர் நேற்று பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றது.

இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்  ஆர்வத்துடனும் பெரும் உற்சாகத்துடனும் எதிர்பார்த்து காத்திருந்தமை அரங்கில் இருந்த ரசிகர்களின் முகத்தில் தெரிந்தது.

இரு அணிகளுக்கு மிடையிலான 2போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியிருந்த நிலையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 5-0 என கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு - 20 போட்டித் தொடரின் முதல் இரு போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இடம்பெற்றன.

முதலிரு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 2-0 என கைப்பற்றியிருந்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதிதியுமான போட்டி பல இழுபறிகளுக்குமத்தியில் பாகிஸ்தானின் லாகூரில் நேற்று இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மாலிக் ஆட்டமிழக்காது  24 பந்துகளில் 51 ஓட்டங்களையும் உமர் அமின் 37 பந்துகளில் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக சஞ்சய, முனவீர மற்றும் உதான ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 181 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்கு தடுமாறி ஆரம்பம் முதலே சீரான இடை வெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய சானக 36 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பாகிஸ்தான் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அமிர்  4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், 3 ஆவது இருபதுக்கு -20 போட்டியில் 36 ஓட்டங்களால் வெற்றிபெற்று 3 -0 என வெள்ளையடிப்புச் செய்து தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்.

இப் போட்டியில் ஆட்ட நாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் பாகிஸ்தான் அணியின் சொயிப் மாலிக் தெரிவுசெய்யப்பட்டார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் 8 ஆண்டுகளின் பின் இடம்பெறும் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.